யதார்த்தமான கதைகள் குறைந்துவிட்டது : இளையராஜா வருத்தம்
தன்ஷிகா, சங்கர் ஹரி, குழந்தை நட்சத்திரங்கள் வர்ஷா, வரோனிகா உட்பட பலர் நடித்துள்ள படம், எங்கம்மா ராணி. இளையராஜா இசை அமைத்துள்ளார். நாளை ரிலீசாக உள்ள படத்தைப் பற்றி இளையராஜா கூறியதாவது: இன்றைய திரையுலகம் எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது. அது சரியான தடத்தில் செல்கிறதா? இல்லை, தடம்மாறிச் செல்கிறதா என்பது பார்க்கும் பார்வையாளர்களுக்கும், படம் எடுப்பவர்களுக்கும் சரியாகத் தெரிவதில்லை. உதாரணத்துக்கு ஒரு விஷயம்.
சினிமாவில் சி.ஜி என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, அதற்கான ரிசல்ட் இப்படித்தான் வரும் என்று சொல்ல முடியுமா? அப்படி இருக்கையில், அதற்கென்று தனி பட்ஜெட் எதற்கு? இப்போது ஒரு சாதாரண, யதார்த்தமான கதையை எமோஷனலாகச் சொல்லும் தன்மை சினிமாவில் குறைந்து கொண்டிருக்கிறது.
சினிமா ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்றாலும், அதற்கான ஒரு கதையம்சம், நல்ல விஷயங்களை நல்லவிதமாகச் சொல்லும், முற்றிலும் மாறுபட்ட தனித்துவத்தன்மை கொண்டிருக்க வேண்டும். அந்தவகையில் எங்கம்மா ராணி படம் சற்று மாறுபட்டு இருந்ததால் இசை அமைத்தேன். படத்தின் பின்னனி இசை ஒவ்வொரு ரீலுக்கும் வித்தியாசமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் காட்சிகளுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தால், பின்னணி இசையை மாற்றி அமைக்க வேண்டியிருந்தது.