ஹைதராபாத்துடன் இன்று மோதல்: மீண்டும் மிரட்டுவாரா ராகுல் திரிபாதி
ஐபிஎல் தொடரில் இன்று மாலை 4 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட், நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
புனே அணி 11 ஆட்டத்தில், 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. சரியான நேரத்தில் அந்த அணி உச்சகட்ட பார்மை அடைந்துள்ளது.
கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் புனே அணி முன்னேற்றம் கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் தொடக்க வீரரான ராகுல் திரிபாதி 52 பந்துகளில் 93 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார்.
அறிமுக சீசனிலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் திரிபாதி, பேட்டிங்கில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தால் தோல்வியை சந்தித்த பலம் வாய்ந்த கொல்கத்தா அணி தற்போது பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான ரேஸில் நெருக்கடியை சந்தித்துள்ளது.
திரிபாதியிடம் இருந்து இன்றும் சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். குஜராத் அணிக்கு எதிராக 63 பந்துகளில் 103 ரன்கள் விளாசிய பென் ஸ்டோக்ஸூம் அதிரடியில் மிரட்ட தயாராக உள்ளார். பந்து வீச்சில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயதேவ் உனத்கட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றி சிறந்த பங்களிப்பை வழங்கினர். இவர்களுடன் இம்ரன் தகிரும் இன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஹைதராபாத் அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
நடப்பு சாம்பியனான ஹைதராபாத் அணி 11 ஆட்டத்தில் விளையாடி 13 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இந்த சீசனில் சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருகிறது. கேப்டன் டேவிட் வார்னர் 61.12 சராசரியுடன் இந்த தொடரில் 489 ரன்கள் சேர்த்துள்ளார்.
பேட்டிங்கில் அவருடன் ஷிகர் தவண், வில்லியம்சன், ஹென்ரிக்ஸ், யுவராஜ் சிங் ஆகியோரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா, ரஷித் கான், சித்தார்த் கவுல், முகமது சிராஜ் ஆகியோர் சொந்த மைதானத்தில் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தயாராக உள்ளனர்.