எல்லை தாண்டிய பாகிஸ்தான் சிறுவன்: தீவிரவாதிகள் சதியா என விசாரணை
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய எல்லைக்குள் நுழைந்த 12 வயது பாகிஸ்தான் சிறுவன் கைது செய்யப்பட்டார்.
எல்லையில் ஊடுருவும் நோக்கில் வேவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இச்சிறுவனை அனுப்பியிருக்கலாம் என்று இந்திய ராணுவம் சந்தேகம் எழுப்பியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, “ரஜோரி பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே 12 வயது சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திருந்தபோது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் அவரைக் தடுத்து நிறுத்தினர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது, அச்சிறுவன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. சிறுவனின் பெயர் அஷ்ஃபக் அலி சவுகான். அவரது தந்தை பலோச் படைப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர். எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்ததாலேயே சவுகான் கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகள் அவரை வேவு பார்க்க பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாரணைக்காக அச்சிறுவன் போலீஸில் ஒப்படைக்கப்படுவார்” எனத் தெரிவித்தார்.