தினகரனை காட்டிக் கொடுத்தது யார்?
அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அக்கட்சியின் நியமன துணைப் பொதுச் செயலர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஹவலா ஏஜெண்ட் நரேஷ் உள்ளிட்ட பலரையும், டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, நடந்தவைகள் அனைத்தையும், அனைவரும் ஒப்புக் கொண்டனர். தினகரனும், மல்லுகார்ஜுனனும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, திருவேற்காட்டில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத்தும் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் வெளிப்பட, அவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது போலீஸ்.
தேர்தல் ஆணையத்துக்கு கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்க முடிவானதும், அந்தப் பணம், ஹவலா ஏஜெண்ட் மூலம் சுகேஷ் சந்திரசேகருக்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த சமயத்தில், வழக்கறிஞர் கோபிநாத், சுகேஷ் சந்திரசேகர் கூடவே இருந்து பணத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சுகேஷ் சந்திரசேகர், கோபிநாத் செல்போனை வாங்கி, வெகுநேரம், சென்னையில் இருந்த தினகரனிடம் பேசியிருக்கிறார். இந்தத் தகவல்களையெல்லாம், போலீஸ் விசாரணையில் கோபிநாத் தெரிவிக்க, அதை மாஜிஸ்திரேட் முன்பாக ஒப்புதல் வாக்குமூலமாக அறிவிக்க செய்து, அதை பதிவும் செய்து விட்டனர்.
இந்த வழக்கில், சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்யப்பட்டது என்பதற்கான முக்கிய சாட்சியமாக கோபிநாத்தும், முக்கிய ஆவணமாக அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலமும் உள்ளதால், வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்து விட்டதாக, டில்லி குற்றப்பிரிவு போலீசார் கூறுகின்றனர்.
இது குறித்து, டில்லி குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கு, சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சமாக பணம் கொடுக்க தீர்மானித்து அதன் அடிப்படையில், தினகரன், மல்லிகார்ஜுன், கோபிநாத் ஆகியோர் செயல்பட்ட தகவல் கிடைத்ததும், சுகேஷ் சந்திரசேகரை தொடர்ந்து கண்காணித்துதான், அவரை 1.3 கோடி ரூபாய் பணத்துடன், டில்லியில், பிடித்தோம்.
கோபிநாத் பங்கு
அவரை கஸ்டடி எடுத்து விசாரித்ததில், தினகரன், மல்லிகார்ஜுன் ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதை புட்டு புட்டு வைத்தார். அதற்கான, ஆதாரங்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றிக் கொண்டுதான், அடுத்த கட்டமாக தினகரனையும், மல்லிகார்ஜுனையும் வளைத்தோம். துவக்கத்தில், விசாரணையின் போது, குற்றத்தை ஒப்புக் கொள்ள மறுத்து மல்லுகட்டினர். விசாரணையின் போது, அடுத்தடுத்து ஆதாரங்களை எடுத்துப் போட, எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டனர். அந்த சமயத்தில்தான், இந்த ஆபரேஷனில், வழக்கறிஞர் கோபிநாத் பங்கு குறித்தும் சொன்னார்கள்.
தினகரனையும், மல்லிகார்ஜுனனையும் சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, கோபிநாத்தையும் தேடி சென்றோம். அவரையும், விசாரணைக்கு வரச் சொல்லி, சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்து விசாரித்ததில், சுகேஷ் சந்திரசேகருக்கு ஹவாலா மூலம் பணம் வந்து சேர்ந்ததில் இருந்து, சுகேஷ் சந்திரசேகரும், தினகரனும் தனது செல்போன் மூலம், பல மணிநேரம் பேசியதையும் ஒப்புக்கொண்டார்.
பெயில் கிடைக்காது
அதை அப்படியே மாஜிஸ்திரேட் முன்னால் கூற வைத்து, பதிவு செய்து விட்டோம். ஆக, இவ்வழக்கில் குற்றம் நடந்துள்ளதற்கான முக்கிய சாட்சியும், ஆவணமும் கிடைத்து விட்டது. இனி, குற்றத்தில் இருந்து யாரும் அவ்வளவு எளிதில் தப்ப முடியாது. தினகரன், மல்லிகார்ஜுன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோருக்கு அவ்வளவு எளிதாக பெயில்கூட கிடைக்காது.
கறுப்பு ஆடுகள்
இந்த வழக்கில், சுகேஷ் சந்திரசேகர் தேர்தல் கமிஷனில் யாருக்கு லஞ்சம் கொடுக்க தயாராக இருந்தார் என்பது குறித்த விசாரணை நடக்கிறது. விரையில், தேர்தல் கமிஷனில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும் பிடிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.