சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பிச்சை எடுக்க கடத்தப்பட்ட 185 குழந்தைகள் மீட்பு
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கோவையில் பிச்சை எடுக்கவும், கூலித்தொழில் செய்யவும் கடத்தப்பட்ட 185 குழந்தைகளை மீட்டுள்ளதாக ஐகோர்ட்டில் போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில், எக்ஸ்னோரா அமைப்பின் நிர்வாகி நிர்மல் ஒரு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை வால்டாக்ஸ் சாலையில் பெற்றோருடன் தூங்கிக்கொண்டிருந்த 10 மற்றும் 11 மாத குழந்தைகள் அடுத்தடுத்து மர்மநபர்களால் கடத்தப்பட்டன.
இதுபோல, சென்னையில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருக்கும் கைக்குழந்தைகள் அடிக்கடி கடத்தப்படுகின்றனர். இந்த குழந்தைகளை கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடும் கண்டனம்
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, வசதி படைத்தவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டால் கண்டுபிடித்துவிடும் போலீசாரால், ஏழைகளின் குழந்தைகளை கண்டுபிடிக்க முடியாதா? என்று நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குழந்தைகள் கடத்தல் வழக்கை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் தனி போலீஸ் பிரிவு உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
போலீஸ் அறிக்கை
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் கே.சங்கர் ஆஜராகி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஐகோர்ட்டு உத்தரவின்படி, ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் ஏப்ரல் 20–ந் தேதி போலீஸ் கமிஷனர் தலைமையில் நடந்தது. இதில் மூத்த போலீஸ் அதிகாரிகள், மாஜிஸ்திரேட்டுகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி அதிகாரிகள், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, ஏப்ரல் 21–ந் தேதி 47 தனிப்பிரிவு போலீசார் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
185 குழந்தைகள் மீட்பு
இதில், 48 பெண் குழந்தைகள், 46 ஆண் குழந்தைகள் என மொத்தம் 94 குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகளை வைத்திருந்த 70 பெண்கள், 9 ஆண்கள் கைது செய்யப்பட்டனர். இதில் 21 குழந்தைகளை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்ற குழந்தைகள் 12 காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை சிறையில் அடைத்துவிட்டோம். இதுபோல குறிப்பிட்ட கால இடைவெளியில் அதிரடி சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதேபோல, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கோவை மாநகரில் பிச்சை எடுக்கவும், கூலி வேலை செய்யவும் பயன்படுத்தப்பட்ட 91 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. அதில், சிலரை பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டோம். மற்ற குழந்தைகளை காப்பகத்தில் வைத்துள்ளோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.
அதிகாரிகளுக்கு பாராட்டு
அறிக்கையை படித்த நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
இந்த குழந்தைகளை மீட்டு, பெற்றோரிடமும் ஒப்படைத்தல், காப்பகத்தில் வைத்து பராமரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்த சென்னை போலீஸ் கமிஷனர் கரன்சின்கா, கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மற்றும் அனைத்து அதிகாரிகளையும் ஐகோர்ட்டு மனதார பாராட்டுகிறது.
சாலைகளில் பிச்சை எடுக்க குழந்தைகளை பயன்படுத்துவதையும், வேலை செய்ய வைப்பதையும் தடுக்கும் விதமாக தமிழக டி.ஜி.பி., குழந்தைகள் நல கமிட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தீவிரமான நடவடிக்கையை எதிர்காலத்தில் எடுப்பார்கள் என்று நம்புகிறோம். தமிழகம் முழுவதும் குழந்தைகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு போலீசாரும், குழந்தைகள் நல கமிட்டியும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை ஜூன் 9–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.