ரயில்வேயில் இனி ‘லஞ்ச’ அதிகாரிகளுக்கு இடமில்லை
லஞ்சம், சொத்து குவிப்பு போன்ற புகார்களில் சிக்கி சிபிஐ மற்றும் சிவிசி.,யின் கண்காணிப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ரயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீபத்தில் பிரதமர் மோடி கூறி இருந்தார்.
இதன்படி லஞ்சம் மற்றும் சொத்து குவிப்பு வழக்குகளில் சிக்கியவர்களின் பட்டியலை ரயில்வே நிர்வாகம் தயாரித்து வருகிறது. உயரதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 4 அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 30 அதிகாரிகளின் பட்டியல் இதுவரை தயார் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்று வழக்கை சந்தித்து வருவோர் அரசு பதவியில் இருந்து, சம்பளம் பெற தகுதியற்றவர்கள் என மத்திய அரசு கருதுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை ரயில்வே அதிகாரிகள் மீது 49,847 புகார்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவற்றில் 11,000 புகார்கள் உயரதிகாரிகள் மீதானது ஆகும்.