600 கிலோ எடை கொண்ட குண்டு மனிதருக்கு அறுவை சிகிச்சை வெற்றி
மெக்சிகோவின் அகுவாஸ்காலி யன்ஸ் நகரைச் சேர்ந்தவர் ஜுவான் பெட்ரோ பிராங்கோ (32). இவரது உடல் எடை 595 கிலோவை எட்டியதால் மிகவும் அவதிப்பட்டார். உலகின் குண்டு மனிதராக (ஆண்) கருதப்படும் இவர், தனது உடல் எடையை 50 சதவீதம் குறைக்க முடிவு செய்தார். இதற்காக அந்நாட் டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு முதல்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
இதுகுறித்து பிராங்கோவுக்கு காஸ்ட்ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் ஜோஸ் காஸ்டனடா கூறும்போது, “பிராங்கோவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் இந்த சிகிச்சையின் மூலம் உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எல்லாம் சரியாக இருக்கும் என்று நம்புகிறோம். அவரை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அடுத்தகட்டமாக வரும் நவம்பர் மாதம் மீண்டும் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன் பிறகு அவரது வயிறு அளவு குறைக்கப்பட்டு குடல் பகுதி மாற்றியமைக்கப்படும்” என்றார்.
இதுபோல, உலகிலேயே மிகவும் பருமனான பெண்ணான எகிப்து நாட்டைச் சேர்ந்த இமான் அகமதுக்கு சமீபத்தில் மும்பையில் காஸ்ட்
ரிக் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் சுமார் 500 கிலோவாக இருந்த அவரது உடல் எடை 177 கிலோவாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.