இந்தியா – பாக்., உறவு மோசமடைந்ததற்கு பாக்.,கே காரணம்
இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமடைந்ததற்கு பாகிஸ்தானே காரணம் என அமெரிக்க உளவுத்துறையில் உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீடு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளுக்கு உள்ள அச்சுறுத்தல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க உளவுத்துறை, இந்தியா-பாக்., உறவு குறித்தும் தெரிவித்துள்ளது. அதில், 2016 ம் ஆண்டு நடந்த 2 மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா – பாக்., உறவு பாதிக்கப்பட்டது. 2017 ல் டில்லியில் மற்றொரு மிக பெரிய அளவிலான தாக்குதலை நடத்த பாக்.,பயங்கரவாதிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இரு நாட்டு உறவுகளையும் மேலும் மோசமடைய செய்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத சக்திகளை தடுக்க பாக்., தவறி விட்டது. பதன்கோட் தாக்குதல் விவகாரத்திலும் முறையான விசாரணையை பாக்., மேற்கொள்ளவில்லை. எல்லைக்கோட்டு பகுதியில் பாக்., படைகள் அத்துமீறி தாக்குவது அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே போர் உருவாகும் சூழலும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இரு நாடுகளிடையேயான பதற்றம் தணிய வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதற்கு எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்களை பாக்., குறைக்க வேண்டும். பதன்கோட் விசாரணையையும் தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.