பஸ் ஸ்டிரைக்கிற்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் இன்று போராட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொது செயலாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.7 ஆயிரம் கோடியை அரசு எவ்வித அறிவிப்பும் இன்றி செலவு செய்துவிட்டு அந்த துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறியிருப்பது நயவஞ்சக செயல். போக்குவரத்து துறையில் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கையோ, நஷ்டத்தை சரி செய்வதற்கான திட்டமோ இல்லாமல் தொடர்ந்து போக்குவரத்து துறையை நஷ்ட கணக்கு காட்டி தனியார் வசம் ஒப்படைக்கும் எண்ணமோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாததற்கு காரணம் அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறை தான். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத அரசு பொய் பிரசாரங்கள் மூலம் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை பொசுக்க பார்ப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்தும், தமிழக அரசை கண்டித்தும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து வட்ட தலைநகரங்களிலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது