Breaking News
வருவதும், வராமல் இருப்பதும் அவர் விருப்பம்: ‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்’

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நேற்று தனது ரசிகர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஒருவேளை, நான் அரசியலுக்கு வந்தால் பணம் சேர்க்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன் என்று தெரிவித்தார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், அரசியல் தலைவர்கள், ஆதரவும், எதிர்ப்பும் என இருவேறு கருத்துக்களை தெரிவித்தனர்.

பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ரஜினிகாந்தின் கருத்தை வரவேற்றனர்.

ஆனால், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு

இந்த நிலையில், நேற்று கொளத்தூர் தொகுதியில் ஆய்வு பணியை மேற்கொண்ட தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், ‘‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள். அவர் அரசியலுக்கு வருவதும், வராமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம். தனிப்பட்ட முறையில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை’’ என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், ‘‘ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தொல்.திருமாவளவன் ஆகியோர் வரவேற்று இருக்கிறார்களே. நீங்கள் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு மு.க.ஸ்டாலின், ‘‘நாங்களும் வரவேற்கிறோம்’’ என்று பதில் அளித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.