எந்த ரகசிய தகவலையும் டிரம்ப் கூறவில்லை: ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்யாவிடம் எந்த ரகசிய தகவலையும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறவில்லை என அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார். அவர், அங்கு அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பற்றிய முக்கிய ரகசிய தகவலை டிரம்ப் பகிர்ந்து கொண்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தகவல், ரஷ்யாவிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத தகவல் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மறுத்தார். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், தங்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், லாவ்ரோவ் – -டிரம்ப் உரையாடல்களின் பதிவுகளை அமெரிக்க எதிர்க்கட்சிகளிடம் வழங்க ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.