சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு
சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
‘இசட் பிரிவு’ பாதுகாப்பு
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து அவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது.அதன்படி, சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா’ இல்லத்தை வீட்டை சுற்றிலும் தமிழக காவல்துறை சி.ஐ.டி. பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 240 போலீசார் 3 ஷிப்டுகளாக பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 5-ந்தேதி ஜெயலலிதா உயிரிழந்தார். இதையடுத்து போயஸ்கார்டன் இல்லத்துக்கு ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு தேவை இல்லை என்றும், அதனை திரும்ப பெற்றுக்கொள்ளவும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேட்டுக்கொண்டார். அதன்பேரில் ஜெயலலிதா வீட்டில் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி ஏந்திய கமண்டோ படை போலீசார் உள்பட 240 போலீசார் வேறு பணிக்கு அனுப்பப்பட்டனர்.
தனியார் பாதுகாவலர்கள்
ஜெயலலிதா வீட்டை பார்வையிட்டு அஞ்சலி செலுத்துவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதாலும், சசிகலாவுக்கு ஆறுதல் கூறுவதற்காக பல்வேறு முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் வந்து செல்வதாலும் போயஸ்கார்டன் பகுதியில் உள்ளூர் போலீசார் வழக்கமான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை உள்பட நிர்வாகிகள் அவ்வப்போது வருகை தருவதால், ஜெயலலிதா வீட்டுக்கு அஞ்சலி செலுத்த வரும் நபர்களை சோதனை செய்து அனுப்பும் பணியில், 2 ஷிப்டுகளாக தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த 30 பாதுகாவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
போயஸ்கார்டன் பகுதியில் போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் வலியுறுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.