தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்: வேலைநிறுத்தம் ரத்தாகிறதா?
திருட்டு வி.சி.டி ஒழிப்பு, திரையரங்க கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருட்டு வி.சி.டி ஒழிப்பு, திரையரங்க கட்டணம் உயர்வு, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 30ம் தேதி முழு வேலைநிறுத்தம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், மே 26ம் தேதி ‘தொண்டன்’ மற்றும் ‘பிருந்தாவனம்’ ஆகிய திரைப்படங்களும் வெளியாகவுள்ளது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே நாளை (மே 21) அனைத்து தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு தயாரிப்பாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சங்கம் விடுத்துள்ள விளம்பரத்தில் கூறியிருப்பதாவது:
“தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனைப் பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்திர தீர்வு காண்பதற்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் 21.05.2017 அன்று மாலை 5 மணிக்கு பிலிம் சேம்பர் வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்கள்.
பல்வேறு சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் மே 30ம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையும் முக்கியமானதாக விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.