Breaking News
ஜெயலலிதா படம் திறப்பு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பிரதமர் மோடிக்கு அழைப்பு

முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

சட்டசபையில் ஜெயலலிதா உருவப்படம்

இந்த சந்திப்பின் போது வறட்சி நிவாரணம், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

மேலும், தமிழக சட்டசபையில் வருகிற ஜூலை மாதம், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்பட திறப்பு விழா நடைபெற இருப்பதாகவும், அதில் கலந்து கொண்டு உருவப்படத்தை திறந்து வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பான கடிதத்தை பிரதமரிடம் அவர் வழங்கினார்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

அழியாத முத்திரை

தமிழக சட்டசபை மண்டபத்தில் மறைந்த முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை ஜூலை மாதம் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பதை தங்களுக்கு தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதா, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் நலனுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்து, இந்திய அரசியல் உலகில் ஒரு அழியாத முத்திரையை பதித்துவிட்டு சென்று இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் மொழிக்காகவும், கலாசாரத்துக்காகவும் மற்றும் தமிழக சட்டசபை உள்பட அனைத்து இடங்களிலும் தமிழக மேம்பாட்டுக்காகவும் அளப்பரிய பங்களிப்பை அளித்து உள்ளார்.

தலைமை விருந்தினர்

நமது ஜனநாயகத்தின் சிறந்த பாரம்பரியத்தை நிலைநிறுத்தியவரும், பாராளுமன்ற முறையையும், அதன் சீரிய பண்புகளையும் பராமரித்தவருமான உயர்ந்த ஆளுமை கொண்ட அரசியல் மேதையான தாங்கள்தான் எங்கள் வணக்கத்துக்குரிய ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க எல்லாவிதத்திலும் தகுதியானவர் ஆவீர்கள்.

எனவே, தாங்கள் ஜூலை மாதத்தில் தங்களுக்கு வசதியான ஒரு நாளில் சட்டசபை மண்டபத்தில் நடக்கும் ஜெயலலிதா படத்திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உருவப்படத்தை திறந்த வைத்து சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

தமிழக அரசின் சார்பில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்து உள்ளது. அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் இந்த விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். நிறைவு விழா டிசம்பர் மாத கடைசியில் சென்னையில் நடக்கிறது.

பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசிய போது, இந்த நிறைவு விழாவில் கலந்துகொள்ளுமாறு அவருக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். மேலும் இது தொடர்பான கடிதத்தையும் பிரதமரிடம் அவர்
வழங்கினார்.

அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:–

சத்துணவு திட்டம்

மிகவும் புகழ்பெற்ற, மக்களின் மனம்கவர்ந்த பிரபலமான தமிழக முதல்–அமைச்சர்களில் ஒருவரான மறைந்த முதல்–அமைச்சர் புரட்சித்
தலைவர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா இந்த ஆண்டு என்பதை தாங்கள் அறிவீர்கள். இந்தியா முழுவதும் மாதிரி திட்டங்களாக நிறைவேற்றப்படும் வகையில், பல்வேறு புதுமையான சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி, தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எம்.ஜி.ஆர். இன்றும் எல்லோராலும் நினைவுகூரும் வகையில் இருக்கிறார்.

அவர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் நிறைவேற்றிய சத்துணவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் பாராட்டப்பட்டு, நாடு முழுவதும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

‘பாரத ரத்னா’ விருது

கடந்த 30 ஆண்டுகளில் தமிழகத்தின் வேகமான சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அவர்தான். மத்திய அரசாங்கம் அவரது இணையற்ற பொதுசேவைக்காக இந்தியாவிலேயே உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ விருதை வழங்கி கவுரவித்தது.

தமிழக மக்களுக்கும், உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்களுக்கும் எம்.ஜி.ஆர். தொடர்ந்து ஒரு உந்துசக்தியாக திகழ்கிறார். அவருடைய பெருந்தன்மைக்காகவும், தாராள மனப்பான்மைக்காகவும், சீரிய தலைமைக்காகவும், மாநிலத்தின் உரிமைக்காக போராடும் உறுதிப்பாட்டுக் காகவும், எப்போதும் அவர்களால் நினைவில் வைத்து போற்றப்படுகிறார்.

சென்னையில் பிரமாண்ட நிகழ்ச்சி

மக்களின் பொதுநலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சேவைகள் மூலம் பாடுபடவேண்டும் என்று லட்சோபலட்ச மக்களுக்கு ஒரு தூண்டுகோலாக எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சரித்திரம் இருக்கிறது. தமிழக அரசு அவரது நூற்றாண்டு விழாவை மிக பொருத்தமான வகையில் பிரமாண்டமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் 2017–ம் ஆண்டு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிட்டு இருக்கிறது.

இறுதி நாள் நிகழ்ச்சியாக ஒரு பிரமாண்டமான பொதுநிகழ்ச்சியை சென்னையில் டிசம்பர் 15–ந் தேதியில் இருந்து 31–ந் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

ஒப்புதல்

இந்த விழாவில், 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் அந்த விழாவின் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது மறைந்த பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நினைவுக்கு நிச்சயமாக புகழ்சேர்க் கும், அஞ்சலியாக விளங்கும்.

இந்த நூற்றாண்டு நிறைவு விழாவில் தாங்கள் கலந்துகொள்வதற்கு ஒப்புதல் அளிக்கும்படி, நான் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விழாவை சென்னையில் நடத்தும் வகையில் தாங்கள் டிசம்பர் 15–ந் தேதி முதல் 31–ந் தேதிக்குள் தங்களுக்கு வசதியான ஒருநாளை குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.