Breaking News
அரசியல் சம்பந்தமாக பிரதமரிடம் எதுவும் பேசவில்லை எடப்பாடி பழனிசாமி பேட்டி

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்த பிறகு தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோரிக்கை மனு

பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கோரிக்கை மனுவை அளித்துள்ளேன்.

நீட் தேர்வு விவகாரம், புதிய எய்ம்ஸ் மருத்துவமனை, காவிரி படுகை புனரமைப்பு, பவானி, பம்பா, அச்சன்கோவில் பிரச்சினை, குறித்து மனு அளித்துள்ளேன்.

விவசாயிகளுக்கு பயிர் காப்புறுதி இழப்பீட்டு தொகை வழங்குதல், தமிழக குடிமராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு, மத்திய அரசு தரவேண்டிய ரூ.17000 கோடி நிலுவைத்தொகையை தர வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் படகுகளை மீட்பது குறித்தும் மனு அளிக்கப்பட்டது.

சட்டசபையில் ஜெயலலிதா படம்

ஜெயலலிதா உருவப்படம் சட்டமன்றத்திற்குள் வைக்கப்பட உள்ளது. அதை பிரதமர் திறந்து வைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளேன்.

அதே போல, சென்னையில் வரும் டிசம்பர் மாத இறுதியில் பிரம்மாண்டமாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவேண்டுமென்று அழைப்பு விடுத்திருக்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

ஜனாதிபதி தேர்தல்

கேள்வி:–ஜனாதிபதி தேர்தலில் அ.தி.மு.க. (அம்மா) எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஓட்டு யாருக்கு?

பதில்:–விரைவில் எங்களுடைய மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி அறிவிக்கப்படும்.

கேள்வி: பிரதமர் சந்திப்பின்போது, அரசியல் ரீதியாக என்ன விவாதிக்கப்பட்டது?

பதில்:–எதுவும் விவாதிக்கப்படவில்லை. நான் சந்தித்திருந்தது, அரசின் சார்பாக பல்வேறு திட்டங்கள், இப்போது குறிப்பிட்டிருக்கிறேன். அந்த திட்டங்களையெல்லாம் வலியுறுத்தி, தமிழகத்திற்கு செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமரை சந்தித்து பேசியுள்ளேன். அரசியல் சம்பந்தமாக எதுவும் பேசவில்லை.

கேள்வி: இப்போது நீங்கள் பேசியது எல்லாமே ஏற்கனவே நீங்கள் 2 மாதத்திற்கு முன்பு பேசிய திட்டங்கள் தானே?

பதில்: கிடையாது, இது புதிய திட்டங்கள், நான் நிறைய புதிய திட்டங்களை வலியுறுத்தி சொல்லியிருக்கிறேன்.

நீட் தேர்வு

கேள்வி:–நீட் தேர்வு குறித்து பேசினீர்களா?

பதில்:–நீட் தேர்வை பொறுத்தவரைக்கும், பிரதமரிடத்தில் மீண்டும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறேன்.

கேள்வி:–வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்களே?

பதில்:–வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது. தென்னை பயிரிட்டு, வறட்சியால் தென்னை மரங்கள் பட்டுப் போயிருந்தால், அந்த விவசாயிகளுக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவித்திருக்கிறது. அப்படி ஏதாவது விடுபட்டிருந்தால், தென்னை மர விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தால், அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தால் அவர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்படும். அது மட்டுமல்ல, தென்னைமர விவசாயிகளினுடைய நலன் கருதி, தென்னை மர விவசாயிகள் கூடுதல் வருமானம் பெறுவதற்கு நீரா என்ற பானம் தயாரிப்பதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

சென்னையில் பேட்டி

நேற்று இரவு சென்னை திரும்பிய முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அடுத்த மாதம் கூடும் என்று தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் முதல்– அமைச்சர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.