மாட்டு இறைச்சி தடைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி
மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ள மத்திய அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக இந்திய தேசிய லீக் கட்சி அறிவித்தது. அதன்படி அக்கட்சியின் தலைவர் தடா ரஹீம் தலைமையில் 50 பேர் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக நேற்று மாலை வந்தனர்.
தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலை நடேசன் பூங்கா அருகே வந்தபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போலீஸ் வாகனத்தின் கண்ணாடி கல்வீசி தாக்கப்பட்டது.
50 பேர் கைது
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தடா ரஹீம் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
நடுரோட்டில் இறைச்சி வெட்டினர்
இதேபோல் பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் குறைந்த எண்ணிக்கையில் வந்ததால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நடுரோட்டில் மாட்டு இறைச்சியை வெட்டி போராட்டம் நடத்தியதையடுத்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரில் தலித் விடுதலை கட்சியினர் மாட்டு இறைச்சி சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மாட்டு இறைச்சி உண்ணும் போராட்டம் நடத்தினர்.