நீதிமன்ற உத்தரவின்பேரில் நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு
திருச்சியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உட்பட 6 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி கே.கே.நகர் ஈ.வெ.ரா சாலையைச் சேர்ந்தவர் லோகநாதன்(55). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவர், திருச்சி ஜே.எம்.2 நீதிமன்றத்தில் கடந்த 4-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2015 ஜூன் மாதம், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் என்னை சந்தித்து, அப்போதைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பினாமி என அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது, சூரிய ஒளி மின்தகடுகள் அமைக்க 200 ஏக்கர் நிலம் வாங்கித் தருமாறு கூறி, முன்தொகையாக ரூ.20 லட்சம் கொடுத்தார். இதையடுத்து எனக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலத்துடன், அருகில் உள்ள நில உரிமையாளர்களிடம் பேசி, மேலும் 151 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்களைப் பெற்று காம ராஜிடம் கொடுத்தேன். இதற்காக ரூ.50 லட்சம் செலவானது.
அதன்பின், அவரே நில உரிமையாளர்களிடம் நேரடியாக பேசத் தொடங்கினார். இதனால், அவர்கள் கொடுத்த ரூ.20 லட்சம் போக, நான் கூடுதலாக செலவு செய்திருந்த ரூ.30 லட்சத்தை திருப்பிக் கேட்டேன். அதற்கு உரிய பதிலளிக்கவில்லை.
இதுதொடர்பாக நத்தம் விஸ்வ நாதன், காமராஜ் உள்ளிட்டவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பின், அவர்களிடமிருந்து எனக்கு மிரட்டல் அதிகரித்தது. இதுதொடர்பாக கே.கே.நகர் காவல்நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தர விட வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.
கடந்த 23-ம் தேதி இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத் துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கே.கே.நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டது.
அதன்பேரில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாங்குநேரியைச் சேர்ந்த காம ராஜ், திண்டுக்கல் மாவட்டம் வேம்பார்பட்டியைச் சேர்ந்த தோட் டம் பாஸ்கர், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த அருண் விஜய குமார் மற்றும் 2 பேர் மீது கூட்டுச் சதி செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறி நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 4 பிரிவு களின்கீழ் நேற்று முன்தினம் இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.