மார்ச் 31-ந் தேதிக்கு பிறகு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அபராதம் மற்றும் 4 ஆண்டுகள் சிறை
புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த மாதம் 8–ந் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
கால அவகாசம் நாளை முடிகிறது
அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இந்த அவகாசம் நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது.
நாட்டில் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.
மார்ச் 31–ந் தேதி வரை…
கால அவகாசம் முடிந்த பிறகும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் அவற்றை, ஜனவரி 1–ந் தேதி முதல் மார்ச் 31–ந் தேதி வரை ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
குறிப்பாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், தொலைதூர பகுதிகளில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை இவ்வாறு கொடுத்து மாற்றிக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது அந்த ரூபாய் நோட்டுகளை தாமதமாக மாற்றுவதற்கான காரணத்தையும் அவர்கள் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அவசர சட்டம்
மார்ச் 31–ந் தேதிக்கு பிறகு, பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுளை வைத்து இருப்பது குற்றமாக கருதப்படும்.
இதுதொடர்பாக மத்திய அரசு, ‘குறிப்பிட்ட வங்கி ரூபாய் நோட்டுகள் மதிப்பு இழப்பு அவசர சட்டம்’ என்ற புதிய அவசர சட்டம் ஒன்றை கொண்டு வந்து உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.