விரைவில் மிகவும் பின் தங்கிய கிராமங்களிலும் அதிவேக இன்டெர்நெட்
இந்தியாவின் செயற்கைகோள் தொழிற்நுட்பத்தால் விரைவில் மிகவும் பின் தங்கிய கிராமங்களில் கூட அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும்.
இன்டெர்நெட் பயன்பாட்டை பொருத்தவரை சீனாவிற்கு அடுத்தபடியாக உலகளவில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.இருந்தாலும் மற்ற நாடுகளை காட்டிலும் சேவையிலும் வேகத்திலும் குறைவாக உள்ளது.
அதிக அளவிலான இணைய சேவை ஆப்டிகல் பைபர் கேபிள் வழியே பெறப்படுவதும், நேரடி செயற்கைக்கோள் சேவை குறைந்த அளவில் கிடைப்பதுமே இதற்கு காரணம். இதற்கு தீர்வு காணவே தற்போது ஜி-சாட் 19 செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜி-சாட் -19 செயற்கைக்கோளை தொடர்ந்து, 5.6 டன் எடை கொண்ட ஜி-சாட் -11 செயற்கைக்கோளையும் விரைவில் விண்ணில் செலுத்த இருக்கிறது இஸ்ரோ நிறுவனம். இந்த இரண்டு செயற்கை கோள்களும் விண்ணில் நிலை நின்று ஒரு வலைப்பின்னலை அமைப்பதன் மூலம், முழுவதும் விண்வெளியையே தளமாக கொண்ட இணையச் சேவை மண்டலத்தை இந்தியா பெறமுடியும்.
ஜி-சாட் -19 செயற்கைக்கோள், அதிக அளவிலான டேட்டாக்களை சீரான வேகத்தில் வழங்க உள்ளது. ஜி-சாட் -11 செயற்கைக்கோளும் இந்த பணியில் இணையும்போது, இந்தியாவின் மிகவும் பின் தங்கிய கிராமங்களில்கூட அதிவேக இணைய சேவை கிடைக்கும்.