தீவிரமானது மணல் தட்டுப்பாடு : இறக்குமதி செய்ய ‘கிரெடாய்’ முடிவு
தமிழகத்தில் மணல் தட்டுப்பாடால், கட்டுமான திட்டங்கள் முடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘கிரெடாய்’ முடிவு செய்துள்ளது. இது குறித்து, ‘கிரெடாய்’ அமைப்பின், சென்னை பிரிவு தலைவர், சுரேஷ் கிருஷ்ணன் கூறியதாவது: கட்டுமான பணிக்கான ஆற்று மணல், ஒரு கன அடி, 35 ரூபாய்க்கு கிடைத்து வந்தது. ஒட்டு மொத்தமாக குவாரிகள் மூடப்பட்ட பின், ஒரு கன அடி, 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ‘புதிய குவாரிகள் திறக்கப்படும், நேரடி விற்பனையில் மணல் விற்கப்படும்’ என, தமிழக அரசு அறிவித்தும், பிரச்னை தீரவில்லை.
ஒரு மாதமாக மணல் கிடைக்காமல், ஒரு கோடி சதுர அடி பரப்பளவிலான வீடுகள் கட்டும் பணிகள் முடங்கியுள்ளன. ஆற்று மணலுக்கு மாற்றாக, ‘எம் சாண்ட்’ என்ற, கிரஷர் துகள்களை பயன்படுத்தலாம் என, அரசு கூறுகிறது. தமிழகத்தில் முறையான தர கட்டுப்பாட்டு வசதிகளுடன், ‘எம் சாண்ட்’ தயாரிக்கும் ஆலைகளின் எண்ணிக்கை மிக குறைவு என்பதால், தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி, வெளி நாடுகளில் இருந்து, மணலை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்கான வழிமுறைகளை ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
வழிகாட்டும் கர்நாடகா : தமிழகத்தில் குவாரிகள் மூடப்பட்ட நிலையில், கர்நாடகத்துக்கு ஆற்று மணல் கடத்தல் குறைந்துள்ளது. இதனால், அங்கு கட்டுமான பணிகளுக்கு மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், அம்மாநில அரசு மணல் இறக்குமதிக்கு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி, மாநில அரசு விற்பனை நிறுவனம் வாயிலாக, சர்வதேச டெண்டர் விடப்பட்டு, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து, ஜூனில், மணல் இறக்குமதி துவங்கிவிட்டது.
கர்நாடகத்தை பின்பற்றி, தமிழக அரசும் சர்வ தேச டெண்டர் விட்டு ஆற்று மணலை இறக்குமதி செய்யலாம் என கட்டுமான துறையினர் வலியுறுத்தி உள்ளனர்.