அ.தி.மு.க. மக்களே…ஜெயலலிதாவுக்கு நோபல் பரிசு…சாத்தியமா?
இன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், ‘எல்லோருக்கும் எப்பொழுதும் சத்தான உணவு என்பது சாத்தியமான லட்சியமே என்பதை மெய்ப்பித்த முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு, மானுட சேவைக்கான பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சையாய் விருது மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட ஏற்பாடுகளை செய்தல்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பது, அவர்களின் தொண்டர்களின் ஆசையாக இருக்கலாம். ஆனால் நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் தெரியுமா?
ஆல்பிரட் நோபலின் நினைவாக நோபல் பரிசானது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என 6 பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகின்றன.
2016-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசானது ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யோஷினோரி ஓஷுமிக்கு வழங்கப்பட்டது. ஆட்டோபேஜி(Autophagy) எனப்படும் செல் தொடர்பான நிகழ்வின் செயல்பாடுகளைத் துல்லியமாக கண்டறிந்ததற்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஆட்டோபேஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பெயர். யோஷினோரி ஓஷூமி ஜப்பான் நாட்டில் இருந்து நோபல் பரிசைப் பெற்ற 23-வது நபர்.
இயற்பியலுக்கான நோபல் பரிசு டேவிட் தௌலஸ், டங்கன் ஹால்டனே மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று பேருக்கு வழங்கப்பட்டது. பரிசுத் தொகையின் பாதித் தொகை டேவிட் தௌலஸ்க்கும், மீதித் தொகை மற்ற இருவருக்கும் பிரித்துத் தரப்பட்டது. இந்த மூன்று பேருமே, பொருட்களின் வடிவ மாற்றங்கள் குறித்த, ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள். இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, ஜான் பியர் சாவேஜ், அமெரிக்காவைச் சேர்ந்த , சர்.ஜெ.ஃபிரேசர் ஸ்டோடர்ட் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பெர்னார்ட் ஃபெரிங்கா ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது.
அமைதிக்கான நோபல் பரிசு கொலம்பிய அதிபர் ஜூவான் மேனுவல் சான்டோஸ்-க்கும் வழங்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவுக்கும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றுதான், தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறார்கள்.
1901 முதல் 2016 வரைக்கும் இதுவரை அமைதிக்காக, 97 நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 130 பேர் இதனைப் பெற்றுள்ளனர். இவற்றில் 104 பரிசுகள் தனி நபர்களுக்கும், 26 பரிசுகள் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. யாருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்பதைப் பற்றி நார்வே நோபல் கமிட்டிதான் முடிவெடுக்கும். இதுவரை 16 பெண்கள் அமைதிக்கான நோபல் பரிசினை பெற்றுள்ளார்கள். 1905-ம் ஆண்டுதான், அமைதிக்கான நோபல் பரிசு முதன்முதலாக பெண்ணுக்கு வழங்கப்பட்டது. இதுவரை நோபல் பரிசு பெற்றவர்களிலேயே குறைந்த வயதுடையவர் மலாலா. இவர் தனது 17 வயதில், 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றார். மொத்தமாகப் பார்த்தால் 1901-ம் ஆண்டு முதல் 2016 வரைக்கும், 579 நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து துறைகளையும் சேர்த்து, 911 பேர் பரிசினைப் பெற்றுள்ளார்கள். இதில் 885 தனி நபர்களும், 26 அமைப்புகளும் அடங்கும். அனைத்து துறைகளையும் சேர்த்து, நோபல் பரிசினைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கை இதுவரை 49.
சரி..ஜெயலலிதாவை பரிந்துரை செய்ய முடியுமா?
முடியாது. 1974-ம் ஆண்டு, மாற்றியமைக்கப்பட்ட நோபல் விதிகளின் படி, இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது கிடையாது. 1974-ம் ஆண்டுக்கு முன்பும், இருவருக்கு மட்டுமே, இறந்த பின்பு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை நோபல் பரிசானது அறிவிக்கப்பட்ட பின்பு, ஒருவர் மரணம் அடைந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படும். ஆனால் 1974-ம் ஆண்டுக்கு முன்பு வரை ஒருவர் நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பின்பு இறந்தால் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம் என விதி இருந்தது. அதன்படித்தான் மேற்கண்ட இருவரும் நோபல் பரிசு பெற்றனர்.
2011-ம் ஆண்டு மருத்துவத்துக்காக நோபல் பரிசு பெற்ற ரால்ப் ஸ்டெய்ன்மேன், விருது அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உயிரிழந்து விட்டார். அப்போதும் இந்த விதி நோபல் கமிட்டி இடையே விவாதங்களை கிளப்பியது. பின்பு இதுபற்றி ஆய்வு செய்த, நோபல் கமிட்டி அவருக்கு நோபல் பரிசு வழங்குவதாக அறிவித்தது. ஆக, மரணித்த ஒருவரை நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கவே முடியாது என்பதுதான் நோபல் விதி.
இந்த விதிகளை யாரால் மாற்ற முடியும்?