லண்டன் தீ விபத்து கட்டடத்தில் 500 பேர் சிக்கியுள்ளதாக தகவல்
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் உள்ள, 24 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை இன்னமும் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர். கட்டடத்துக்குள், 500க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனின் லான்காஸ்டர் மேற்கு எஸ்டேட் பகுதியில் உள்ள, பிரென்பல் டவர் என்ற, 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பில், நேற்று முன்தினம் அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டு, 24 மணி நேரத்துக்கு பின்னும், தொடர்ந்து கட்டடத்தின் பல்வேறு இடங்களில் தீ எரிவதால், அதை அணைக்க முடியாமல், தீயணைப்பு வீரர்கள் திணறுகின்றனர்.கட்டடத்தின், நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த ‘பிரிஜ்’ திடீரென வெடித்து சிதறியதால் மின்கசிவு ஏற்பட்டு, இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட, 15 நிமிடங்களுக்குள், 24 மாடிகளுக்கும் தீ பரவியுள்ளது.
பாதுகாப்பு குளறுபடி : கடந்த, 1970களில் கட்டப்பட்ட இந்த கட்டடம், சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. 1999ல், இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டால் எச்சரிக்கும் அலாரம் வசதியும் இல்லை. அதனால், விபத்து ஏற்பட்டதுகூட தெரியாமல், பலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
திடீரென தீ சூழ்ந்ததால், மேல் தளங்களில் இருந்த பலர், தங்கள் குழந்தைகளை காப்பாற்றும் நோக்கத்தில் கீழே வீசியுள்ளனர். சிலர், கீழே குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
ஆபத்து காலத்தின்போது பயன்படுத்த, ஒரே ஒரு படிக்கட்டு மட்டுமே இருந்ததால், பலரும் முண்டியடித்ததில், தள்ளுமுள்ளு ஏற்பட்டும், புகையில் மூச்சு திணறியும், படிக்கட்டுகளில் சிலர் உயிரிழந்து கிடப்பதாக, தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
500 பேர் பலி?
இந்த தீவிபத்தில், 12 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், 74 பேரில், 18 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த கட்டடத்தில், 120 வீடுகள் உள்ளன. தீ, மிக வேகமாக பரவியதாலும், புகை மூட்டம் சூழ்ந்ததாலும், பலரால் தப்பிக்க முடியவில்லை.
விபத்து ஏற்பட்ட உடன், ‘யாரும் பயப்பட வேண்டாம். வீட்டிலேயே இருக்கவும், தீயை அணைக்கும் பணி நடக்கிறது’ என, அரசு நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. அதனால் பலர் வீட்டிலேயே முடங்கியிருந்தனர்.
‘கட்டடத்துக்குள், 500க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம்’ என, போலீசார் சந்தேகப்படுகின்றனர். அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.