மின் வாரிய லஞ்ச பொறியாளர்களை கையும் களவுமாக பிடிக்க குழு
மின் வாரியத்தில், லஞ்சம் வாங்கும் பொறியாளர்களை, கையும் களவுமாக பிடிக்க, லஞ்ச ஒழிப்பு போலீசில் இருப்பது போல, சிறப்பு குழு அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
புதிய மின் இணைப்பு, பெயர் மற்றும் இணைப்பு மாற்றம் உள்ளிட்ட காரணங்களுக்காக, பொது மக்கள், மின் வாரிய அலுவலகங்களுக்கு செல்கின்றனர். அந்த வேலைகளை செய்து தர, ஊழி யர்கள், அதிகாரிகள் லஞ்சம் கேட்கின்றனர். அதேபோல, வாரிய பணிகளை, குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்க, மேற்பார்வை பொறியாளர், தலைமை பொறியாளர்கள் லஞ்சம் வாங்குகின்றனர். லஞ்சம் தர மறுத்தால், மின் வாரியத்தில், எந்த வேலையும் நடக்காது என்ற சூழல் உள்ளது. இதனால், பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, லஞ்சம் கேட்கும் பொறியாளர்களை, கையும் களவுமாக பிடிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின் வாரியத்தில், விஜிலென்ஸ் டி.ஜி.பி., என்ற பதவி உள்ளது. அதற்கு, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியை, தமிழக அரசு நியமிக்கிறது. அவர் தலைமையில், பறக்கும் படை, அமலாக்க குழு உள்ளன. தற்போது, விஜிலென்ஸ் பிரிவுக்கு, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட இடத்துக்கு, விஜிலென்ஸ் அதிகாரிகள் சென்று, புகார் அளித்தவர் மற்றும் புகார் சுமத்தப்பட்டவர்களை விசாரித்து, அறிக்கையை உயர் அதிகாரிக்கு அனுப்புவர். அதன் அடிப்படையில், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின் வாரியத்தில், பல தொழிற்சங்கங்கள் உள்ளன. அவை, விசாரணை நடத்தும் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடனடி தீர்வு கிடைப்பதில்லை. இதை தவிர்க்க, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் இருப்பது போல, வாரியத்திலும் தனி குழு அமைக்க, மின் வாரிய உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் குழுவில், மக்கள் பிரதிநிதிகளும் இடம்பெறுவர். விஜிலென்ஸ் பிரிவுக்கு, லஞ்ச புகார் வந்தால், இந்த குழுவுக்கு அனுப்பப்படும். அவர்கள், புகார் அளித்தவரை அழைத்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வழங்கி, அதிகாரிகளிடம் கொடுக்குமாறு கூறுவர். அதை கொடுக்கும் போது, மறைந்திருக்கும் அதிகாரிகள், லஞ்சம் வாங்கியவரை கையும் களவுமாக பிடித்து, உடனடியாக, ‘சஸ்பெண்ட்’ செய்வர்; பின்னர் விசாரணை நடக்கும். இதற்காக, லஞ்ச ஒழிப்பு போலீசாரை அழைத்து, மின் வாரிய குழுவுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.