தனியார் மயமாகிறது ஏர் இந்தியா; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ‘ஏர் இந்தியா’வின் பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடன்சுமை:
‘ஏர் இந்தியா’ நிறுவனத்துக்கு 140 விமானங்கள் உள்ளன. 41 சர்வதேச நகரங்களையும், உள்நாட்டில் 72 நகரங்களையும் இணைக்கிறது. மொத்த உள்நாட்டு சந்தையில் 14 சதவீத சந்தையை ஏர் இந்தியா நிறுவனம் வைத்திருக்கிறது. எனினும் ரூ.52,000 கோடிக்கும் அதிமான அளவுக்கு கடன் சுமை உள்ளதால், அந்த நிறுவனத்தில் அரசுக்கு உள்ள பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
ஒப்புதல்:
இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்ததாவது: ‘ஏர் இந்தியா’வின் பங்குகளை விற்பதற்கு மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. எவ்வளவு பங்குகளை விற்பனை செய்வது, இதற்கு பின்பற்றவேண்டிய நடைமுறை என்ன என்பது குறித்து முடிவு செய்ய நிதியமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்படும்.
கிடப்பில்..
முன்னதாக கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய தே.ஜ., கூட்டணி, ஏர் இந்தியாவிலிருந்து 60 சதவீத பங்குகளையும், இந்தியன் ஏர்லைன்சிலிருந்து 51 சதவீத பங்குகளையும் விற்பது குறித்து பரிசீலித்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.