ஜெ வுக்கு என்ன சிகிச்சை கொடுத்தோம்னு சொல்ல முடியாது – அப்பல்லோ அதிரடி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 75 நாட்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் உயிரிழந்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் அவருக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தெரியாமல் பொதுமக்கள் குழம்பினர். முதல்வர் நன்றாக உள்ளார்; உணவுகளை சாப்பிட்டார் ; நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கைகளை மட்டும் வெளியிட்டது. இந்த அளவிற்கு நல்ல முன்னேற்றம் அடைந்துவந்த ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் கூட கூறியுள்ள நிலையில்,
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் 75 நாட்களாக ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒன்பது கேள்விகள் அடங்கிய மனுவை தாக்கல் செய்திருந்தார்,
இந்த மனுவிற்கு பதிலளிக்க அப்பல்லோ நிர்வாகம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக அவர்கள் அனுப்பிய கடிதத்தில், அப்பல்லோ மருத்துவமனை இந்திய கம்பெனிகள் சட்டம் 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும் பொது நிறுவனம். எனவே எங்கள் நிறுவனம் தகவல் அறியும் உரிமைசட்ட அதிகார வரம்பிற்குள் வரவில்லை. எனவே தங்களது கேள்விக்கு எங்களால் பதிலளிக்க இயலவில்லை என்று கூறப்பட்டுள்ளது.