விம்பிள்டன் டென்னிஸ்: ஜெயிக்கப் போவது யார்?
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் மிகவும் புகழ் பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி அடுத்த வாரம் விம்பிள்டன் நகரில் தொடங்க வுள்ளது. டென்னிஸ் அரங்கில் மிக முக்கியமான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்த தொடர் ஆவேசம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விம்பிள்டன் டென்னிஸ் களத்தில் சீறிப்பாய காத்திருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றி ஒரு பார்வை..
ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து):
18 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 92 ஒற்றையர் டென்னிஸ் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள பெடரர், மேலும் ஒரு சாம்பியன் பட்டத்துக்காக விம்பிள்டன் களத்தில் குதிக்கிறார். காயம் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் சரியாக ஆடாமல் இருந்த பெடரருக்கு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றது புத்துயிரைக் கொடுத்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் செல்லப் பிள்ளையாக கருதப்படும் ரோஜர் பெடரர், இதுவரை 7 முறை இந்தத் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இம்முறை 8-வது முறையாக பட்டம் வென்று, மிக அதிக வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்ற சாதனையைப் படைக்க விரும்புகிறார். தரவரிசைப் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்தாலும் இவரது வேகம் எந்த வீரரையும் வீழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
ஆண்டி முர்ரே (இங்கிலாந்து)
டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள முர்ரேவுக்கு, தன் சொந்த மண்ணில் பட்டம் வெல்வது எப்போதுமே ஆனந்தம் அளிக்கும் விஷயம். 2013, மற்றும் 2016-ம் ஆண்டுகளில் இங்கு பட்டம் வென்ற இவர், இப்போது 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆசையில் களம் இறங்குகிறார். இதுவரை 45 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ள முர்ரே, மீண்டும் ஒருமுறை தனது சாகசத்தை உள்நாட்டில் காட்டவேண்டும் என்று உள்ளூர் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதே நேரத்தில் காயம் காரணமாக அவர் இத்தொடரில் ஆட முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
ரபேல் நடால் (ஸ்பெயின்)
டென்னிஸ் உலகில் ரோஜர் பெடரருக்கு சமமாக நின்று போராடும் வீரர் என்று ரபேல் நடாலைக் கூறலாம். தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் நடால், இதுவரை 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் உட்பட 73 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பிரெஞ்சு ஓபன் போட்டியில் பட்டம் வென்ற கையோடு விம்பிள்டனுக்கு வரும் இவருக்கு, இங்கு மறக்க முடியாத தோல்விகளும் கிடைத்துள்ளன. 2 முறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை வென்றபோதிலும் பலமுறை இங்கு தரவரிசையில் 100-வது இடத்துக்கு மேல் இருக்கும் வீரர்களிடம் தோற்றுள்ளார். இம்முறை அவர் வீழ்வாரா வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி)
பெண்கள் டென்னிஸில் தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர், கடந்த ஆண்டு விம்பிள்டன் டென்னிஸில் இறுதிப் போட்டிவரை முன்னேறினார். இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸிடம் தோற்றதால் அவரது கோப்பை கனவு தகர்ந்தது. இந்த முறை செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டனில் ஆடவில்லை என்பதால் கூடுதல் தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகிறார் கெர்பர். கடந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் பட்டம் வென்ற இவர், இந்த ஆண்டு இதுவரை பட்டங்கள் எதையும் வெல்லவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் சுற்றிலேயே தோற்றுப்போனது இவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த விம்பிள்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அந்த களங்கத்தை துடைத்தெறியும் முயற்சியில் உள்ளார் கெர்பர்.
சிமோனா ஹாலெப் (ரொமேனியா)
25 வயதான சிமோனா ஹாலெப், சர்வதேச டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இதுவரை 15 முறை ஒற்றையர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள இவர், ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக்கூட வெல்லவில்லை. இப்போது விம்பிள்டன் பட்டத்தை வெல்வதன் மூலம் இந்தக் குறைய நீக்கும் எண்ணத்தில் உள்ளார் சிமோனா ஹாலெப். விம்பிள்டன் தொடரைப் பொறுத்தவரை கடந்த 2014-ம் ஆண்டு அரை இறுதிச் சுற்றுவரை முன்னேறியதுதான் அவரது சாதனையாக உள்ளது. சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜெலீனா ஒஸ்டாபென்கோவிடம் இறுதிப் போட்டியில் தோற்று நூலிழையில் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வென்றே ஆகவேண்டும் என்ற வெறியுடன் ஈஸ்ட்போர்ன் நகரில் பயிற்சி பெற்று வருகிறார் ஹாலெப்.
கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு)
டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியலில் 3-வது இடம் வகிக்கும் செஸ் நாட்டின் கரோலினா பிளிஸ்கோவா, இதுவரை 8 ஒற்றையர் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். ஆனால் ஹாலெப்பைப் போலவே கிராண்ட் ஸ்லாம் பட்டம் மட்டும் இன்னும் அவரிடம் சிக்காமல் உள்ளது. இந்த கிராண்ட் ஸ்லாம் கனவை நனவாக்க, விம்பிள்டனை நம்பியுள்ளார் பிளிஸ்கோவா. அதேநேரத்தில் விம்பிள்டன் டென்னிஸில் பல முறை ஆடியுள்ள இவர், ஒரு முறைகூட 2-வது சுற்றைத் தாண்டியதில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் சமீப காலமாக புல்தரை மைதானங்களில் வெற்றிகளை குவித்து வருவது இவரது விம்பிள்டன் கனவுக்கு புத்துயிர் அளிக்கிறது.