ஜிஎஸ்டி-யால் தங்கம் விலை உயர்வதால் நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்
ஜிஎஸ்டி சட்டம் இன்று முதல் அமலாவதால் தங்கத்தின் விலை சற்று உயரும் என்பதால் நகைக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை உறுதிப்படுத்தும் சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் ஜூலை 1 முதல் அமலாகும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பல்வேறு பொருட்களின் வரி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜிஎஸ்டி-க்கு முன்பு வரை தங்கத்துக்கு 2 முதல் 2.5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. ஜிஎஸ்டி-ல் தங்கத்துக்கு 3 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜிஎஸ்டி அமலுக்கு வரும்போது தங்கத்தின் விலை சற்று உயரும் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தியாகராயநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் நகை வாங்க வந்திருந்த திருவொற்றியூரைச் சேர்ந்த கோகிலா கூறுகையில், “திருமணத்துக்காக அடுத்த மாதம் நகை வாங்கலாம் என்று எண்ணி இருந்தோம். ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் நகை விலை சற்று உயரும் என்று கூறினார்கள். அதனால் முன்னதாகவே நகை வாங்குவதற்கு வந்துவிட்டோம். சாதாரண நாட்களை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஜிஎஸ்டி-யால் நகை விலை அதிகரிக்கும் என்று கருதி எங்களைப் போன்று பலரும் நகை வாங்க வந்தனர்” என்றார்.
இதேபோல, வடபழனியைச் சேர்ந்த ராஜன் கூறுகையில், “நகை வாங்க, நகைக்கடையில் சீட்டு போட்டிருந்தோம். அதிக நாட்கள் சீட்டு கட்டிவிட்டு பின்னர் நகை வாங்கலாம் என்று எண்ணி இருந்தோம். ஆனால் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் தங்கத்தின் விலை சற்று உயரும். எனவே, இதுவரை இருந்த பணத்துக்கு தங்கம் வாங்கிவிட்டோம்” என்றார்.
தியாகராயநகரில் உள்ள நகைக்கடையின் மேலாளர் ஒருவர் கூறுகையில், “ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் தங்கத்திற்கு 3 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதனால் நாளை (இன்று) முதல் தங்கம் விலை சற்று அதிகரிக்கும்.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே நகை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இன்று (நேற்று) கடைசி நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக உள்ளது. கடந்த 10 நாட்களாகவே நகை விற்பனையும் அதிகரித்தது” என்றார்.
வீட்டு உபயோகப் பொருட்கள்
ஜிஎஸ்டி-ல் குளிர்சாதனப் பெட்டி, கணினி, ஏ.சி., துணி துவைக்கும் இயந்திரம், மின் விசிறி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரி விதிக்கப் பட்டுள்ளது. இந்த வரி உயர்வு ஏற்கெனவே இருந்த வரி விதிப்பைக் காட்டிலும் 14 சதவீதம் உயர்வாகும்.
எனவே, ஜிஎஸ்டி வந்தால் பொருட்களின் விலை அதிகரிக்கும் என்பதால், ஜிஎஸ்டி அமலாவதற்கு முன்பாகவே பொருட்களை விற்கும் வகையில் விற்பனையாளர்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்திருந்தனர். இதனால், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடைகளிலும் வழக்கத்தைவிட நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.