ஊனமுற்ற ராணுவத்தினரின் ஓய்வூதியம் கணக்கிட புதிய முறை
பணியின்போது காயமடைந்து ஊனம் ஏற்படும் முப்படையினருக்கான ஓய்வூதியத்தை நிர்ணயிக்க, புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையைச் சேர்ந்த வீரர்கள், பணியின்போது காயமடைந்து, நிரந்தர ஊனம் ஏற்படும்போது, பணியில் இருந்து முன்னதாகவே ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கு, ஓய்வூதியம் அளிக்கும் திட்டம், 2006ல் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், 100 சதவீதம் ஊனமடைவோருக்கு, அவர்கள் வாங்கிய கடைசி சம்பளத்தின், 30 சதவீதத்தில், டி.ஏ., எனப்படும் அகவிலைப்படி கழிக்கப்பட்டு, ஊனத்துக்கான ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
ஊனத்தின் அளவைப் பொறுத்து, ஓய்வூதியம் குறையும். ஆனால், ஊனத்தின் அளவு சரியாக கணக்கிடப்படுவதில்லை என, பலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், முன்னாள் ராணுவ அதிகாரி, லெப்டினென்ட் ஜெனரல் முகேஷ் சபர்வால் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்துள்ள அறிக்கையின்படி, ஊனத்துக்கான ஓய்வூதியத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
இது குறித்து, ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது: பாதிக்கப்பட்டோர் வழக்குகள் தொடர்வதை குறைக்கவும், ஊனத்துக்கான ஓய்வூதியத்தில் உள்ள குறைகளை களையவும், ஓய்வூதியத்தை கணக்கிட புதிய முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி, ஊனத்தின் அளவு, மூன்று படிகளாக நிர்ணயிக்கப்பட உள்ளது. 20 முதல், 50 சதவீதம் வரை ஊனமுற்றோர், 50 சதவீதம் ஊனமடைந்தவர்களாக கருதப்படுவர்.
அதேபோல், 50 முதல், 75 சதவீதம் வரை ஊனமுள்ளோர், 75 சதவீதம் ஊனமுற்றோராகவும், அதற்கு மேற்பட்டோர், 100 சதவீதம் ஊனமுற்றோராகவும் கருதப்படுவர். இதன் மூலம், இதுவரை நிலவி வந்த குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என, அரசு நம்புகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு ராணுவ அமைச்சக வட்டாரங்கள் கூறின.