Breaking News
ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கு: மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த 2 பேர் கைது

ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் சேலம், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூ.323 கோடி பழைய, கிழிந்த 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு கொண்டுவரப்பட்டது.
சேலத்திலிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4-15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்த ரயிலில் பணப்பெட்டி கொண்டு வரப்பட்டது. பெட்டியை திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ரயில் பெட்டியின் மேற்கூரையில் துவாரமிட்டு ரூ.5 கோடியே 78 லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரிந்தது. இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலங்காத நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தது. இந்த வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பு துலங்கியதாக தகவல் வெளியானது.

2 பேர் கைது

இந்த நிலையில், ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி பழைய ரூபாய் நோட்டுகளை கொள்ளையடித்த வழக்கில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த
தினேஷ், ரோஹன் பார்த்தி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர்.

சின்ன சேலத்திற்கும், விருதாசலத்திற்கும் இடையே ரயில் பெட்டி மேற்கூரையை துளையிட்டு கொள்ளையடித்ததாக கைதானவர்கள் வாக்கு மூலம் அளித்துள்ளனர். விருதாசலம் ரயில் நிலையத்தில் இறங்கி காத்திருந்த மேலும் ஐவருடன் மத்திய பிரதேசம் தப்பி சென்றதாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.