எய்ட்ஸ் பாதிப்படைந்தவர்களுக்கான சுயம்வரம்.. இது சூரத் நெகிழ்ச்சி!
உலகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருப்பவர்கள் பட்டியலில், இந்தியாவுக்கு மூன்றாவது இடம். ஆக இந்தியாவில் மொத்தம் 21 லட்சம் மக்கள் HIV-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 25 சதவிகிதம் மக்கள், மேற்கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். முறையான சிகிச்சை இல்லாவிட்டாலும் பரவாயில்லை; இவர்கள் சமூகத்தாலும் புறக்கணிக்கப்படுவதுதான் கொடுமையோ கொடுமை! அப்படியென்றால், HIV-யால் பாதிக்கப்பட்டால், சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழ முடியாதா?
“முடியும்” என்கிறார், ‘Gujarat State Network of People’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர், தக்ஸா பட்டேல் எனும் பெண்மணி.
குஜராத் மாநிலம் சூரத்தில், ஒவ்வொரு வருடமும் நடக்கிறது ‘ஜீவன்ஸாதி பஸந்த்கி மேளா’ என்னும் திருமண சுயம்வர நிகழ்ச்சி. ‘GSNP’ எனும் NGO அமைப்பு நடத்தும் இந்த சுயம்வரத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் கலந்துகொள்ள வரும் மணமக்கள் அனைவருமே HIV-யால் பாதிக்கப்பட்டவர்கள். குஜராத் முழுவதும் இருந்து கிட்டத்தட்ட HIV-யால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோர் இந்த அமைப்பில் பதிவு செய்திருக்கிறார்கள். தங்களுக்கு எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் இருப்பதை மறந்து, மணமக்கள் ரொம்ப உற்சாகமாக தங்கள் மண வாழ்க்கையில் நுழைந்து வாழ்க்கையை ரசிக்கும் ஆர்வம், இங்கு வரும் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது
HIV பாதிப்பு விகிதாசாரத்தில் ஆண்களே அதிகமாக இருப்பதால், இந்த சுயம்வரத்தில் பெண்களுக்குத்தான் முன்னுரிமையும் இடஒதுக்கீடும் அதிகம். ஆண்கள் ஒவ்வொருவராக மேடையேறி தங்களைப் பற்றியும், தங்கள் பணி, வருமானம் முதலியவற்றையும்… HIV-யால் பாதிக்கப்பட்ட முறையைப் பற்றியும் சொல்லி, சுயஅறிமுகம் செய்துகொள்ள வேண்டும். அவரைப் பிடித்திருந்தால் பெண்கள் அவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ‘‘எப்போதுமே ஆண்கள்தான் பெண் பார்ப்பது வழக்கம். இதில் நாங்கள்தான் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்போம். எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் இவரை மிகவும் பிடித்திருக்கிறது. இனிமேல் திருமணத் தேதியைக் குறிக்க வேண்டியது மட்டும்தான் வேலை!’’ என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார் சுயம்வரத்துக்கு வந்திருந்த ஒரு மணப்பெண்.
‘எய்ட்ஸால் நாமும் பாதிக்க வேண்டாம்; பாதித்தவர்களையும் கைவிட வேண்டாம்’ என்கிற நோக்கில், இந்த ‘ஜீவன்ஸாதி பஸந்த்கி மேளா’வைக் கடந்த ஒன்பது வருடங்களாக நடத்தி வருகிறார், இதன் தலைவர் தக்ஸா பட்டேல். ‘‘இதை மேரேஜ் கன்சல்டேஷனாகவும் நடத்தி வருகிறோம். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் எங்கள் நிறுவனத்தில் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் குஜராத் மாநிலத்தில் இருந்து மட்டும்தான் மக்கள் இந்த சுயம்வரத்துக்கு வந்தார்கள். இப்போது குஜராத்துக்குப் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் HIV நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் லைஃப் பார்ட்னரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆர்வத்துடன் வருகிறார்கள். எங்கள் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திருமணம் செய்த அனைத்து தம்பதிகளும், இப்போது நலமாக இருக்கிறார்கள். எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே! அவர்களுக்கும் சாதாரண மனிதர்கள்போல் குடும்பம், குழந்தை, பணி என்று சமூகத்தில் அந்தஸ்தோடு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்கும். அதை நிறைவேற்றி வைக்கத்தான் இந்தப் பணியை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம்!’’ என்கிறார் தக்ஸா பட்டேல். யாரையும் ஒதுக்கி வைக்காமல், அவர்களுக்காகவும் யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தக்ஸா.
நன்றி : விகடன்