கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் வடகொரியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.
வடகொரியா அச்சுறுத்தல்
குறிப்பிட்ட ஒரு குடும்பத்தின் ஆட்சி நடந்து வரும் வடகொரியா நாட்டில் கிம் ஜாங் அன் அதிபராக உள்ளார். அண்டை நாடான தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக தனது நாட்டின் எல்லையில் படைகளையும் அவர் குவித்து வைத்திருக்கிறார். தென் கொரியாவுக்கு ஆதரவு அளிக்கும் அமெரிக்காவையும் மிரட்டி வருகிறார்.
ஐ.நா.வின் தடையை மீறி கடந்த ஆண்டு அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு, நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் அணுஏவுகணை சோதனைகளை தொடர்ச்சியாக நடத்தினார். இதற்காக ஐ.நா.சபை ஏற்கனவே வடகொரியா மீது பொருளாதார தடை விதித்து உள்ளது.
யாரும் நெருங்க முடியாது
இந்த நிலையில் புத்தாண்டு தினத்தையொட்டி கிம் ஜாங் அன் டெலிவிஷனில் தோன்றி நாட்டு மக்களிடையே பேசும்போது, ‘‘நாம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக செலுத்தும் திட்டத்தின் இறுதி கட்டத்தில் இருக்கிறோம். இதை நாம் நிகழ்த்தி விட்டால் இங்கிருந்தே அமெரிக்காவின் கடற்கரை நகரங்களை (சுமார் 10 ஆயிரம் கிலோ மீட்டர்கள் தொலைவு) நம்மால் தாக்கிட முடியும். தற்போது கிழக்கு பகுதியில் வலிமை வாய்ந்த ராணுவத்தை கொண்டு இருக்கிறோம். நம்மை எந்தவொரு வலிமையான எதிரியாலும் நெருங்க முடியாது’’ என்று எச்சரித்தார்.
அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில், கிம் ஜாங் அன்னின் இந்த பேச்சு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனை எரிச்சல் அடையச் செய்து இருக்கிறது. இதனால் உடனடியாக பென்டகன் பதிலடி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், கூறப்பட்டு இருப்பதாவது:–
விளைவுகளை சந்திக்க நேரிடும்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தக் கூடாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஏற்கனவே வடகொரியாவுக்கு தடை விதித்து உள்ளது. அதையும் மீறி சோதனை நடத்துவோம் என்று வடகொரியா கூறுகிறது.
சர்வதேச அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு ஊறுவிளைக்கும் நடவடிக்கைகளில் வடகொரியா ஈடுபட்டால், தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக அது கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
அமெரிக்க படைகளுக்கு, தன்னையும், தனது கூட்டணி நாடுகளையும் பாதுகாக்கும் திறனும், எதிரியை ஒடுக்கும் வலிமையும் எப்போதும் உள்ளது. வடகொரியாவின் இதுபோன்ற திட்டங்களை அனைத்து நாடுகளும் கண்டிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நன்றி :தந்தி