கருப்பு பணத்துக்கு எதிரான போர் தொடரும் பிரதமர் மோடி உறுதி
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிரான போர் தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார்.
லட்சக்கணக்கான மக்கள்
உத்தரபிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜனதா சார்பில் நேற்று லக்னோவில் மிகப்பெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ‘மகா பரிவர்த்தன் கூட்டம்’ என்ற பெயரில் அங்குள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் நடந்த இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.
கருப்பு பணத்துக்கு எதிராக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக நடந்த மிகப்பெரிய இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் சுமார் 1 மணி நேரம் நிகழ்த்திய உரையில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகளை கடுமையாக தாக்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
14 ஆண்டுகள்
பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் நான் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதில்லை. அந்த வகையில் என்னுடைய வாழ்நாளில் நான் பார்த்த மிகப்பெரிய பொதுக்கூட்டம் இது. இதை தொலைக்காட்சியில் பார்க்கும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் ராஜஸ்தான் கவர்னர் கல்யாண்சிங் போன்றவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவர். அவர்களது ஆசியும் கட்சிக்கு கிடைக்கும்.
இந்த பெருங்கூட்டத்தை பார்ப்போருக்கு, உத்தரபிரதேச தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது. பா.ஜனதாவை 14 ஆண்டுகளாக மாநிலத்தில் இருந்து நாடு கடத்திவைக்கப்பட்டு இருந்தது போன்ற நிலைமை இந்த தேர்தலில் முடிவுக்கு வரும் என மக்கள் நினைக்க தொடங்கி உள்ளனர். உண்மை என்னவென்றால் பா.ஜனதாவை நாடுகடத்தி வைக்கவில்லை. மாநிலத்தின் வளர்ச்சியைத்தான் 14 ஆண்டுகளாக நாடுகடத்தி வைத்திருந்தனர். அது தற்போது முடிவுக்கு வரப்போகிறது.
வளர்ச்சி முக்கியமில்லை
நான் உத்தரபிரதேசத்தில் இருந்துதான் எம்.பி.யாகி இருக்கிறேன். இந்த மாநிலத்தில் எப்படிப்பட்ட அரசுகள் ஆட்சியில் இருக்கின்றன என்பதை பார்த்து வருகிறேன். இங்குள்ள சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு மாநிலத்தின் வளர்ச்சி முக்கியமில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மத்தியில் எங்கள் கட்சி ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநிலத்துக்கு நிதி கமிஷன் மூலம் ஒரு லட்சம் கோடிக்கு மேல் நிதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த நிதி சரியான முறையில் செலவிடப்படவில்லை. எங்கள் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு பணிகளை இந்த அரசு மேற்கொள்ளவில்லை என தினமும் அவர்கள் புகார் கூறி வருகிறார்கள்.
பா.ஜனதாவால் மட்டுமே முடியும்
ஒரு கட்சி கடந்த 15 ஆண்டுகளாக தனது மகனை முன்னிலைப்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது. மற்றொரு கட்சியோ, அவர்கள் முறைகேடாக சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதிலேயே கவனத்தை கொண்டுள்ளது. இன்னும் ஒரு கட்சியால் அவர்களது குடும்ப பிரச்சினையையே சமாளிக்க முடியவில்லை.
எனவே இவர்களால் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல முடியாது. ஆனால் பா.ஜனதாவால் மட்டுமே மாநிலத்தை காப்பாற்ற முடியும். இந்திய மக்கள் தான் எங்களுக்கு உயர் கட்டுப்பாடு. 125 கோடி மக்களை தவிர எங்களுக்கு வேறு எதுவும் பெரிதல்ல.
மத்திய அரசு தற்போது சொந்தமாக முடிவு எடுக்கிறது. நாடு ஒரு பிரதமரை பெற்றுள்ளதுடன், மக்களின் நலன்களை மட்டுமே பிரதானமாக கொண்ட அரசையும் பெற்று இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளது.
வளர்ச்சி சாத்தியமாகாது
வறுமை, கல்வி அறிவின்மை, நோய்கள் போன்ற தீங்குகளை ஒழித்து இந்தியாவை முன்னோக்கி நடைபோட வைக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் உத்தரபிரதேசத்தின் நிலைமை மாறினால்தான் இந்த கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தரபிரதேசம் வளர்ச்சியடையாமல், தேசத்தின் வளர்ச்சி என்பது சாத்தியமாகாது.
தற்போதைய மாநில அரசு எதையும் செய்யவில்லை. விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்வதில் அரசு தவறிவிட்டது. இதனால் விவசாயிகள் கடுமையான பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். செயல்படுவதற்கு பதிலாக சமாஜ்வாடி அரசு வெற்று அரசியலில் ஈடுபட்டு வருவதுடன் விவசாயிகளை மத்திய அரசுக்கு எதிராக தூண்டி விடுகிறது.
மோடியை எதிர்ப்பதில்…
மாநிலத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும் எப்போதாவது ஒன்று சேர்ந்ததை நீங்கள் பார்த்ததுண்டா? ஆனால் மோடியை எதிர்ப்பதில் மட்டும் அவர்கள் ஒன்றிணைந்து இருக்கிறார்கள்.
மோடியை நீக்க வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் கருப்பு பணத்தை நீக்க வேண்டும் என நான் கூறுகிறேன். மோடியை அகற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என நான் கூறுகிறேன். நாம் எதை நீக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள்.
கருப்பு பணத்தை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுப்பது அவர்களுக்கு தொந்தரவாக தெரிகிறது. அவர்களது நாற்காலிகள் ஆட்டம் காண்பதுதான் அவர்களது பிரச்சினை. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் அமல்படுத்தப்பட்ட இந்த சூழலில் இந்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் பொருத்தமற்றதாக மாறியுள்ளன.
வேரோடு அகற்றுவேன்
ஆனால் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை நாட்டில் இருந்து முற்றிலும் வேரோடு அகற்றுவேன் என்பதை நான் உங்களுக்கு உறுதியாக கூறுகிறேன். அதுவரை இதற்கான போர் அனைத்தும் வலிமையாகவும், வீரியத்துடனும் தொடரப்படும். இதற்கு உத்தரபிரதேச மக்களாகிய உங்கள் அனைவரின் ஆசியும் எங்களுக்கு தேவை.
ஒருகாலத்தில் சாதி, மதம் போன்றவை முக்கியமானதாக இருந்திருக்கலாம். நீங்களும் சாதி, மத ரீதியான அரசியலை சகித்து வந்திருக்கிறீர்கள். ஆனால் வருகிற தேர்தலில் இவை அனைத்தையும் மறந்து விட்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள். அதிக பெரும்பான்மையுடன் வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நன்றி :தந்தி