Breaking News
தொழில் நெறிமுறைகளை பின்பற்றி தரத்தில் மேம்பட்டு நிற்கும் ‘‘தினத்தந்தி’’; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம்


தொழில் நெறிமுறைகளை பின்பற்றி தரத்தில் ‘‘தினத்தந்தி’’ மேம்பட்டு நிற்கிறது என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினார்.

குடும்பத்தினரின் சிறப்பு
சென்னை, ‘‘தினத்தந்தி’’ அலுவலகத்திற்கு நேற்று வந்த மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி, வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு ‘தினத்தந்தி’ பற்றி வெளியிட்ட கருத்துகள் வருமாறு:–

‘‘தினத்தந்தி’’ பழம் பெருமை மிக்க நிறுவனம் என்பதும், ‘‘தினத்தந்தி’’ நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் குடும்பம் பண்பு நலன்களுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட குடும்பம் என்பதும் மனதில் ஆழமாக பதிந்த வி‌ஷயமாகும். அரசியலில் இருந்தாலும் அரசியல்வாதியாக மாறாமல் செயல்படுவதுதான் அவர்கள் குடும்பத்தினரின் சிறப்பு.

‘‘தினத்தந்தி’’ குழுமத்தினரிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால், சமூக பொறுப்புகளுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்பதுதான். கல்வி என்பது தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. 70 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவில் 35 சதவீத மக்களுக்கு எழுத வாசிக்கத் தெரியாது என்பது துரதிருஷ்டமாகும். இந்த வி‌ஷயத்தில் லாபம் கருதாமல் அவர்கள் பகுதியில் கல்வி உயர்வுக்காக செயல்பட்டு வருகின்றனர். கல்விக்காக செலவழிக்கின்றனர்.

வேரை மறக்காதவர்கள்
சிறு விவசாய குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு அவர்களிடம் பிடித்த மற்றொரு வி‌ஷயமும் உண்டு. எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் நான் சொல்லும் வி‌ஷயம் என்னவென்றால், பெற்ற தாய், பிறந்த ஊர், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றை எப்போதுமே மறக்கக்கூடாது என்பதைத்தான். தற்போது வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிப்பது நாகரிகமாக கருதப்படுகிறது.

மாணவர்களிடம் நான் சொல்வது, வெளிநாட்டுக்கு செல்லுங்கள், சம்பாதியுங்கள், தாய்நாடு திரும்புங்கள் என்பதைத்தான். நமது சமூகம்தான் நமக்கு ஊக்கம் தந்து நம்மை உயர்த்தியது. அதை மறக்கக் கூடாது. ‘‘தினத்தந்தி’’ குழுமத்தினரும் தங்களது வேரை மறக்கவில்லை என்பது அவர்களைப் பற்றி எனக்கு பிடித்த மற்றொரு அம்சம். அவர்களுக்கு சொந்தமான திருச்செந்தூர் பகுதியை மறக்காமல் அங்குள்ளவர்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்கின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தொழில் நெறிமுறை
சி.பா.ஆதித்தனார் தொடங்கி தற்போதுள்ள தலைமுறையினர் வரை அனைவருமே எளிமையாக நடந்து கொள்வது சிறப்பானதாகும். சமுதாயத்தில் தற்போது தொழில் தர்மம் இல்லாத சூழ்நிலையில், ‘‘தினத்தந்தி’’ பத்திரிகையை, அவர்களின் முன்னோரால் கடைப்பிடிக்கப்பட்ட தொழில் நெறிமுறைகளை பின்பற்றி, தரத்தை மேம்படுத்தி வருவது, அவர்களைப் பற்றி எனக்கு பிடித்த அம்சங்களில் மற்றொன்றாகும்.

‘‘தந்தி டி.வி.’’
‘‘தந்தி டி.வி.’’ பற்றி என்னுடன் சென்னையில் 2–ந் தேதி (நேற்று) பூப்பந்து ஆடிய சில முக்கிய நபர்கள் மூலம் அறிந்துகொண்டேன். அரசியல், சமுதாயம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான எனது பேட்டி பற்றி புகழ்ந்து பேசினர். அதோடு தமிழகத்தில் தந்தி டி.வி. நம்பகத்தன்மை கொண்ட டி.வி.யாக செயல்படுகிறது என்றும் தெரிவித்தனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது.

உண்மையின் பக்கம்
பத்திரிகையின் மதிப்பை ‘‘தினத்தந்தி’’ குடும்பத்தார் மேம்படுத்தி வருகின்றனர். அது தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமாகும். எந்த நிலையிலும் உண்மையின் பக்கத்தில் நிற்கும் பத்திரிகை ‘‘தினத்தந்தி’’. உண்மையின் பக்கம் நின்று மக்களுக்கு அதனடிப்படையிலான செய்திகளை மட்டும் பகிர்வதுதான் முக்கியமானது.

செய்திகளையும், கருத்துகளையும் கலந்து சொல்லக்கூடாது. செய்தியை செய்தியாகவும், கருத்தை கருத்தாகவும் பகிர வேண்டும். செய்தி என்பது யதார்த்தம். கருத்து உங்களுடையது. எனவே, செய்தித்தாள் என்பது கருத்துத்தாளாக இருந்துவிடக்கூடாது. கருத்துக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பகுதியில் மட்டும்தான் அதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி :தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.