“ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையும், மறைவுக்கு பிறகும் நடந்தது என்ன?” உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் விளக்கம்
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையும், அவர் மறைவுக்கு பிறகும் நடந்தது என்ன? என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதம் தற்போது வெளியாகி உள்ளது.
ஆஸ்பத்திரியில் அனுமதி
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் கடந்த மாதம் 7-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தீவிர காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக செப்டம்பர் 22-ந் தேதி சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் அவருடைய உடல்நிலை சீராக இருந்தது. பின்னர் திடீரென மோசமடைந்தது. 50 நாட்களுக்கு மேலாக டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலை சற்று தேறியது.
உயிர் பிரிந்தது
இதையடுத்து நவம்பர் 19-ந் தேதி அவர் பல்நோக்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார். டிசம்பர் 4-ந் தேதி மாலை நான் மும்பையில் இருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. நான் உடனே சென்னைக்கு விரைந்து வந்தேன்.
ஆஸ்பத்திரியில் அவருக்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து ஆஸ்பத்திரி தலைவர் மற்றும் டாக்டர்கள் எனக்கு விளக்கம் அளித்தனர். ஜெயலலிதாவுக்கு நுரையீரல் செயல்பாட்டுக்கான எந்திரமான எக்மோ வழியாக சிகிச்சை அளிப்பதாக தெரிவித்தனர். எனினும் அவருடைய உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலைக்கு மீண்டும் சென்றது.
இதனால் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11.30 மணிக்கு அவருடைய உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
புதிய அமைச்சரவை
அதே நாள் இரவு அ.தி.மு.க. கட்சியின் பொருளாளரும், மூத்த மந்திரியுமான ஓ.பன்னீர்செல்வம் கவர்னர் மாளிகையில் என்னை சந்தித்தார். அப்போது ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தன்னை அ.தி.மு.க.வின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக கடிதத்தை ஓ.பன்னீர்செல்வம் என்னிடம் அளித்தார். இதனால் நான் இந்திய அரசியல் சட்டப்பிரிவு 164(1)ன் கீழ் ஓ.பன்னீர்செல்வத்தை தமிழக முதல்-அமைச்சராக நியமித்து அரசு அமைக்குமாறு உத்தரவிட்டேன்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய தலைமையில் 31 உறுப்பினர்கள் அடங்கிய அமைச்சரவை பட்டியலை என்னிடம் அளித்தார். டிசம்பர் 6-ந் தேதி பகல் 1 மணிக்கு கவர்னர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
நன்றி : தந்தி