Breaking News
பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி; மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சிறப்பு பேட்டி

பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப்பெரிய வெற்றி என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.

இதனால் மத்திய பட்ஜெட்டில் வரி குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘தினத்தந்தி அலுவலகத்துக்கு வந்தார்’
மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி வெங்கையா நாயுடு நேற்று சென்னை வேப்பேரியில் உள்ள ‘‘தினத்தந்தி’’ தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை ‘தினத்தந்தி’ நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர், சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து ‘‘தினத்தந்தி’’ தலைமைச்செய்தியாளர் டி.இ.ஆர்.சுகுமார் வெங்கையா நாயுடுவிடம் சிறப்பு பேட்டி கண்டார். அவர் கேட்ட கேள்விகளும் அதற்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அளித்த பதில்களும் வருமாறு:–

கருப்பு பணம் லஞ்சத்துக்கு எதிரான போர்
கேள்வி:– ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து 50 நாட்கள் முடிவடைந்துவிட்டன. இந்த திட்டத்தின் வெற்றியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

பதில்:– கருப்பு பணம் மற்றும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி போர் மேற்கொண்டு வருகிறார். அவை நாட்டை மிகவும் கேடுக்குள்ளாக்கி பல்வேறு விளைவுகளை பலவகைகளில் ஏற்படுத்தியுள்ளது.

நீதிபதி வாஞ்சு கமிட்டி கடந்த 1977–ம் ஆண்டில் பெரிய பணத்தாள்களை செல்லாததாக ஆக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. நிதித்துறை அமைச்சகத்தின் அப்போதைய செயலாளர் தற்போது எழுதியுள்ள புத்தகத்தில், அப்போதய நிதித்துறை மந்திரி ஒய்.பி.சவான் ஒரு குறிப்பை எழுதி அதை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியிடம் கொண்டு சென்றார்.

கருப்பு பணம் அதிகரித்து பொருளாதாரத்தை பாதிக்கிறது என்பதால் அதை ஒழிக்கும் வகையில் நாம் பெரிய பணத் தாள்களை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினார். அதற்கு இந்திரா காந்தி கூறிய பதிலைப் புரிந்து கொண்டு அதை கைவிட்டுவிட்டார் என்று எழுதியுள்ளார்.

காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை
2011–ம் ஆண்டு கருப்புப் பணத்தைப் பற்றி சுப்ரீம் கோர்ட்டு மிகுந்த வேதனை தெரிவித்தது. இதுதொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது. 2011–14 வரை இந்த வி‌ஷயத்தில் காங்கிரஸ் ஆட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் இப்போது பிரதமர் அதை செயல்படுத்தி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி இதுபோன்ற ஒரு முடிவை எடுத்தார் என்பதற்கு இதுதான் பின்னணியாக உள்ளது.

வெற்றி
இந்த திட்டத்தின் வெற்றிக்கான முதல் சமிக்ஞை என்னவென்றால், 15 லட்சம் கோடி ரூபாய் அரசுக் கணக்கில் வந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதை வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்.

ஏனென்றால் அனைத்து ரூபாய் நோட்டுகளும் வெளியே வந்துவிட்டன. அவை கருப்போ, வெள்ளையோ ஆனால் வெளியே வந்துவிட்டன. இந்த நோட்டுகள் பற்றி ஆய்வு செய்த பிறகுதான் அது தெரிய வரும். வீட்டில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வைத்துள்ள பணம் செல்லாது என்ற நிலையில், மற்ற பணம் எல்லாமே புழக்கத்துக்கு வந்துவிட்டன. இது மிகப் பெரிய வெற்றி.

வட்டி குறைப்பு
இதில் கிடைத்துள்ள ஆக்கப்பூர்வமான அம்சம் என்னவென்றால், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வட்டித் தொகையை 0.09 சதவீதம் குறைத்துக் கொண்டதுதான். அதை பஞ்சாப் தேசிய வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் பின்பற்றியுள்ளன. இந்த வட்டி குறைப்பை மேலும் பல வங்கிகள் பின்பற்றும் என்று நம்புகிறோம்.

இந்தியாவில் வட்டி அளவு உயர்ந்த நிலையில் உள்ளது. வட்டியின் அளவு எப்போதெல்லாம் குறைகிறதோ, தொழில், பொருளாதார நடவடிக்கைகள், தொழிற்சாலைகள் வளர்ச்சி அடைகின்றன.

வட்டி தள்ளுபடி
நாட்டில் வீட்டு வசதி திட்டத்துக்கு போதுமான பணம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். பொருளாதாரத்தின் பின்தங்கிய மக்கள், குறைவான வருமானம் பெறும் மக்கள், ஏழைகள் ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். 25 சதவீதம் பேர் ஏழை என்றாலும், மீதமுள்ளவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை, நடுத்தர மக்களின் உயர்வை மையப்படுத்தியதாக இருந்தது. அவர்களுக்கு ரூ.9 லட்சம் வரையிலான கடனுக்கு வட்டிக்கு 4 சதவீதம் மானியம் தரப்படுகிறது. தற்போது வட்டி விகிதம் 9 முதல் 9.5 ஆக உள்ளது என்பது தெரிந்ததுதான். ரூ.12 லட்சம் வரையான கடனுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. வீட்டு வசதிக் கடனுக்கு 6 சதவீதம்தான் வட்டி என்பது மிகப் பெரிய ஊக்கத்தை அளிப்பதாக உள்ளது. இது வீட்டுவசதி மந்திரி என்ற முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இதன் பயனாளிகளுக்கான தகுதி பற்றி ஆலோசனை நடத்தி, விதிமுறைகளை வகுக்க இருக்கிறோம்.

மக்களின் மேம்பாட்டுக்கு
ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய திட்டத்தால், வங்கிகளுக்குத்தான் பணம் வந்துள்ளதே தவிர எங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கின்றனர். பணத்தை வங்கிகள் தேக்கி வைக்கப்போவதில்லை. அவை மக்களிடம்தான் அளிக்க இருக்கின்றன.

மும்பை பத்திரிகையில் வந்த செய்திப்படி, தங்கநகை தொழிலில் உள்ளவர்கள், குடிசைவாசிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 600 கோடி ரூபாய் அளவுக்கு பணம் போட்டதாக கூறப்பட்டுள்ளது. இப்படி வெளிவரும் பணமெல்லாம் நலிவடைந்த மக்களின் மேம்பாட்டுக்காக மத்திய அரசால் செலவழிக்கப்படும்.

குறுகிய கால இடையூறு
பணப் பரிவர்த்தனை அனைத்தும் டிஜிட்டல் முறை – எலக்ட்ரானிக் முறைக்கு வந்துவிட்டால் வருமான வரி சோதனைக்கு வேலையிருக்காது. ஏனென்றால், ஒருவரிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது வெளிப்படையாகிவிடும். அனைத்து பணப் பரிவர்த்தனையும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகிவிடும். இவையெல்லாம், ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய திட்டத்தின் உடனடி பலன்கள்.

இந்தத் திட்டத்தில் குறுகியகால இடையூறுகள் உண்டு. ஆனால் நீண்ட காலத்துக்குப் பிறகு மிகுந்த பலனளிக்கக் கூடியது. குறுகிய காலத்தில் சில பின்னடைவுகள் இருக்கலாம். ஆனால் நீண்ட கால பலனாக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்த திட்டம் உதவும்.

நீண்டகால நோயை தீர்க்கும் கசப்பு மருந்துதான். ஒருவர் உடலுக்குள் புற்றுநோய் புகுந்துவிட்டால், ஹீமோதெரபி மூலம் குணமாக்குகிறோம். ஹீமோதெரபியால் முடி கொட்டிவிடும் என்று பயந்தால், புற்றுநோய்க்கு பலியாக வேண்டியதுதான்.

இப்போது ஒவ்வொருவர் முன்பும் நான் வைக்கும் கேள்வி இதுதான். புற்றுநோய்க்காக உயிரை இழக்க வேண்டுமா அல்லது முடியை மட்டும் இழக்கலாமா என்பதுதான்.

அடுத்தடுத்த திட்டங்கள் வரும்
ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கிய திட்டத்தோடு பிரதமர் நரேந்திர மோடி நின்றுவிட போவதில்லை. அடுத்தடுத்து திட்டங்கள் வரவுள்ளன. அதுபற்றி நான் இப்போது சொல்ல முடியாது. இதற்கான மக்களின் மனநிலையிலும் மாற்றம் வர வேண்டும் என்பது அவரது விருப்பம். அதோடு நிறுவனங்கள் மற்றும் தனி மனிதனை மேம்படுத்தவும் அவர் விருப்பம் கொண்டுள்ளார்.

தனி மனிதனை மேம்படுத்துவது கல்வி, திறமை, கடன் வழங்குவதன் மூலமாகத்தானே தவிர இலவசங்கள் மூலமாக அல்ல.

சுயஉதவி குழுக்கள்
இந்தியாவில் 300 தொழிற்சாலைகள், வங்கிகளில்தான் அதிகபட்சம் கடன் வாங்கியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது 40 சதவீதம் பணம், தொழிற்சாலைகளுக்குக் கடனாகப் போவதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் நலிவடைந்த மக்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். விவசாயிகள், மீனவர்கள், பூ விற்பவர்கள், துணி துவைப்பவர், முடி திருத்துவோர் போன்றவர்களுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் ஏழைகளுக்கு கடன் கொடுத்தால் அவர்கள் அதை திருப்பித் தர மாட்டார்கள் என்று கூறுகின்றனர். அதற்கும் பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். சுய உதவிக் குழுக்கள் இதற்கு உதவுகின்றன. 98 சதவீத கடன் திரும்பப் பெறப்படுகின்றன.

வரி குறையும்
இந்தியாதான் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உள்ளது. அவர்களுக்கு திறமைகளை வளர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளார். இந்தியாவை சிறந்த நாடாக மாற்றும் நோக்கத்தில் இருப்பவர் அவர். அவரது அணுகுமுறை எதுவும் சமரசத்துக்கு உரியது அல்ல.

வங்கிகளில் முறைகேடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் மீதான பயத்தின் காரணமாகத்தான் வங்கிகளுக்கு பணம் வருகிறது. ஏழைகளில் ரட்சகர் அவர். இந்தத் திட்டத்தால் தற்போது வட்டி குறைப்பு வந்துள்ளது.

எல்லாருமே வரிக்கான வலைக்குள் வந்துவிட்டால், வரி குறைப்பும் வர வாய்ப்புள்ளது. அதைத் தெரிந்து கொள்ள அடுத்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்வரை காத்திருக்க வேண்டும்.

கேள்வி:– வங்கிகள், ஏ.டி.எம்.களில் காத்திருந்து பணம் எடுக்கும் தற்காலிக வலி எப்போது போகும்?

பதில்:– படிப்படியாக என்பதுதான் எனது பதில். 133 கோடி மக்களைக் கொண்ட பெரிய நாடு இது. அதிக மதிப்பைக் கொண்ட ரூபாய் நோட்டுகள் 86 சதவீதம் உள்ளன. எனவே இதற்கு கொஞ்சம் நாள் ஆகும். பணத்தை அச்சடிப்பதும் எளிதான காரியம் அல்ல. டிஜிட்டல் முறைக்கு மக்கள் மாறியாக வேண்டும். அதன் பிறகு சூழ்நிலை மாறும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.

நன்றி : தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.