Breaking News
சென்னை ஓபன் டென்னிஸ் குரோஷியா வீரர் போர்னா கோரிச் அதிர்ச்சி தோல்வி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் குரோஷியா வீரர் போர்னா கோரிச் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

சென்னை ஓபன் டென்னிஸ்

தெற்காசியாவில் நடைபெறும் ஒரே ஏ.டி.பி. தொடர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியாகும். இந்த ஆண்டுக்கான ஏர்செல் 22-வது சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. பிரதான ஆடுகளத்தில் முதல் ஆட்டம் தொடங்கும் முன்பு, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் கடந்த ஆண்டு போட்டியில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய குரோஷியா வீரர் போர்னா கோரிச், தகுதி சுற்று மூலம் முன்னேறிய தென் கொரியா வீரர் ஹியோன் சங்கை சந்தித்தார்.

போர்னா கோரிச் தோல்வி

கடந்த ஆண்டை போல் இந்த முறையும் ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போர்னா கோரிச் 3-6, 5-7 என்ற நேர்செட்டில் ஹியோன் சங்கிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் ரஷிய வீரர் டேனில் மெட்வதேவ் 6-3, 6-3 என்ற நேர்செட்டில் பிரேசில் வீரர் தியாகோ மோன்டீராவை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் ஸ்டீவ் டார்சிஸ் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் நிகோலா மெக்டிச்சை (குரோஷியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

இஸ்ரேல் வீரர் வெற்றி

மற்றொரு ஆட்டம் ஒன்றில் இஸ்ரேல் வீரர் துடி செலா 6-2, 6-2 என்ற நேர்செட்டில் டாமிர் ஜூம்ஹர் (போஸ்னியா) புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இன்னொரு ஆட்டத்தில் சுலோவக்கியா வீரர் கோவலிக், போர்ச்சுகல் வீரர் கேஸ்டாவ் எலியாஸ்சை சந்தித்தார். இதில் கோவலிக் 6-7 (5-7) முதல் செட்டை இழந்தாலும், பின்னர் சுதாரித்து ஆடி அடுத்த 2 செட்களையும் 6-4, 6-3 என்ற தனதாக்கி வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜர்ஜென் மெல்சர் (ஆஸ்திரியா)-ரென்ஜோ ஆலிவோ (அர்ஜென்டினா) ஜோடி 4-6, 7-6 (7-3), 11-9 என்ற செட் கணக்கில் ஆந்த்ரே பெஜிமான் (ஜெர்மனி)-யென் ஹூசன் லு (சீன தைபே) இணையை சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

நன்றி : தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.