ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணிக்கு 465 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 538 ரன்கள் குவித்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 3–வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த பாகிஸ்தான் 315 ரன்களில் ஆட்டம் இழந்து ‘பாலோ–ஆன்’ ஆனது. யூனிஸ்கான் 175 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பாகிஸ்தானுக்கு ‘பாலோ–ஆன்’ வழங்காமல் 223 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா அதிரடியில் ஜமாய்த்தது. டேவிட் வார்னர் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்து வியப்பூட்டினார். டெஸ்டில் இது 2–வது அதிவேக அரைசதமாக (ஏற்கனவே பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 2014–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்) பதிவானது. வார்னர் 55 ரன்களும் (27 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), உஸ்மான் கவாஜா 79 ரன்களும் (நாட்–அவுட்), கேப்டன் ஸ்டீவன் சுமித் 59 ரன்களும், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப் 40 ரன்களும் (நாட்–அவுட்) விளாசினர். ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 241 ரன்களுடன் (ரன்ரேட் 7.53) ‘டிக்ளேர்’ செய்து பாகிஸ்தானுக்கு 465 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. மெகா இலக்கை நோக்கி 2–வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் நேற்றைய முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. சிட்னி மைதானத்தில் வெளிநாட்டு அணி எதுவும் 200 ரன்களுக்கு மேலான இலக்கை துரத்தி பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.