Breaking News
குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுப்பு பதில் அளிக்கும்படி மண்டல அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவு

3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகை குஷ்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், நடிகை குஷ்பு ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

வெளிநாடு சுற்றுலா

நான் 1988-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறேன். தற்போது நான் டி.வி. நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளேன். என்னுடைய பாஸ்போர்ட் 2012-ம் ஆண்டு மார்ச் 9-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 8-ந் தேதி வரை, 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால், நான் அலுவலக பணிக்காகவும், குடும்பத்துடன் சுற்றுலாவுக்காகவும் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தேன்.

அவ்வாறு வெளிநாட்டிற்கு செல்லும்போது, என் பாஸ்போர்ட்டில் இதற்கான பதிவு செய்யப்பட்டன. இதனால், பாஸ்போர்ட்டில் உள்ள பக்கங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. இதையடுத்து புதிய தாள்களை ஒட்டித் தரும்படி சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தேன்.

தேர்தல் பிரசாரம்

ஆனால், புதிய தாள்களை ஒட்டும் நடவடிக்கை தற்போது இல்லை என்றும், அதற்கு பதில் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க கோரி விண்ணப்பம் செய்து, அதன் மூலம் புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொள்ளும்படியும் கூறினார்கள்.

இதையடுத்து, புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்தேன். ஆனால், என் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதால், பாஸ்போர்ட்டை புதுப்பித்து தர முடியாது என்று மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நான் கடந்த 2009-ம் ஆண்டு பிரபலமான அரசியல் கட்சியில் (தி.மு.க.வில்) இணைந்தேன். 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது, அந்த கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தேன்.

3 வழக்குகள்

அப்போது, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில், சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் என் மீது ஒரு கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதே சட்டப்பிரிவுகளின் கீழ், தேனி மாவட்டம், பி.சி.பட்டி போலீஸ் நிலையத்திலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸ் நிலையத்திலும் தலா ஒரு வழக்குகள் என்று மொத்தம் என் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன். இந்த 3 வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும், எனக்கு முன்ஜாமீன் வழங்கியும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்குகளை காரணம் காட்டி, எனக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்க அதிகாரிகள் மறுக்கின்றனர்.

ரத்து செய்யவேண்டும்

என் மீது கிரிமினல் வழக்கு ஆண்டிப்பட்டி குற்றவியல் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருவதாக ஆண்டிப்பட்டி போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையில், எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் 30-ந் தேதி வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல முடிவு செய்து விமான டிக்கெட்டும் பதிவு செய்து இருந்தேன். எனக்கு பாஸ்போர்ட் வழங்காததால், வெளிநாடு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க முடியாது என்று கடந்த டிசம்பர் 28-ந் தேதி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். என்னுடைய பாஸ்போர்ட்டை புதுப்பித்து, புதிய பாஸ்போர்ட்டை வழங்கும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நோட்டீஸ்

இந்த மனுவை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். பின்னர், மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நன்றி் : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.