1,500 பேர் பங்கேற்கும் மூத்தோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 35-வது மாநில மூத்தோர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் 35 வயது முதல் 95 வயதுக்கு மேல் வரை ஒவ்வொரு 5 வயது பிரிவுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 1,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மூத்தோர் போட்டியில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தினசரி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போட்டி நடைபெறும். போட்டி இடைவெளியில் நடைபெறும் பதக்க அணிவிக்கும் நிகழ்ச்சியில் சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள். போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் சுழற்கோப்பை வழங்கப்படும். இந்த போட்டியின் அடிப்படையில் ஐதராபாத்தில் வருகிற 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடைபெறும் தேசிய மூத்தோர் தடகள போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்யப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்க தலைவர் செண்பகமூர்த்தி, செயலாளர் பழனிச்சாமி, பொருளாளர் ராதாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி் : தினத்தந்தி