ஆந்திராவில் ரெயில் தடம் புரண்ட விபத்தில் பலி 40 ஆக உயர்வு
ஆந்திராவில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்தது.
தடம் புரண்டது
சத்தீஷ்கார் மாநிலம் ஜக்தால்பூர் நகரில் இருந்து ஒடிசா தலைநகர் புவனேசுவரத்துக்கு நேற்று முன்தினம் மதியம் ஹிராகாண்ட் என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 11.15 மணி அளவில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள கொனேரு என்னும் இடம் அருகே சென்றபோது திடீரென தடம் புரண்டது. இதில் அந்த ரெயிலின் என்ஜினும், 9 பெட்டிகளும் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதுடன் பக்கவாட்டில் சரிந்து விழுந்தன.
40 பேர் பலி
நள்ளிரவில் விபத்து நடந்ததால் கண் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 40 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உயிர் தப்பிய பயணிகள் 13 பஸ்கள் மூலம் அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மோடி, சோனியா இரங்கல்
ரெயில் விபத்து நடந்த இடத்துக்கு ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ரெயில்வே வாரிய தலைவர் ஏ.கே.மிட்டல் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டனர்.
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலா ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதேபோல் ரெயில்வே இலாகா ரூ.2 லட்சம் உதவித்தொகை அறிவித்து உள்ளது.
இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் நாசவேலையா?
இதற்கிடையே, மாவோயிஸ்டுகளின் நாசவேலை காரணமாக ரெயில் தடம்புரண்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி கிழக்கு கடலோர ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரெயில் தடம்புரண்ட பகுதி மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி ஆகும். ஏனெனில் விபத்து நடந்த இடத்தை சற்று நேரத்துக்கு முன்புதான் ஒரு சரக்கு ரெயில் கடந்து சென்று உள்ளது. மேலும், சம்பவ இடத்தில் ரெயில் தண்டவாளம் சிதைந்து காணப்படுகிறது. எனவே நாசவேலை நடந்திருக்கலாம்” என்றனர்.
இதுபற்றி ஒடிசா போலீஸ் டி.ஜி.பி. கே.பி.சிங் கூறுகையில், “அதற்கான வாய்ப்பே இல்லை. ஏனென்றால் கொனேரு பகுதி மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லாத பகுதி ஆகும். எனவே இதை முற்றிலுமாக மறுக்கிறோம்”என்றார்.
ஜக்தால்பூர்-புவனேசுவரம் ரெயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது குறித்து ரெயில்வே இலாகா விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.
காங்கிரஸ் கருத்து
ரெயில் விபத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேல் தனது டுவிட்டர் பதிவில், “அடிக்கடி ரெயில் விபத்து நடப்பது ரெயில்வே இலாகா பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதையும், இதற்கு தீர்வு காண கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதையும் வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது” என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி மன்றக் குழுவும் கருத்து தெரிவித்து இருக்கிறது.
நன்றி : தினத்தந்தி