விஜய்யின் நிதான, கோலியின் தங்குதடையற்ற சதங்களுடன் இந்தியா 356 ரன்கள் குவிப்பு
ஹைதராபாத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது.
விராட் கோலி தனது 16-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 111 ரன்களுடனும், ரஹானே 45 ரன்களுடனும் முதல் நாள் ஆட்ட முடிவில் களத்தில் உள்ளனர். ரஹானே, கோலி இணைந்து 4-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 26.2 ஓவர்களில் இதுவரை 122 ரன்களைச் சேர்த்துள்ளனர். இதில் கடைசி 10 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டது.
முரளி விஜய் நிதானத்துடன் ஆடி தொடக்க விக்கல்களுக்குப் பிறகு நிலைத்து 160 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 108 ரன்கள் எடுத்து தைஜுல் இஸ்லாம் பந்தை ஸ்வீப் செய்ய முயன்று லைனை தவறாகக் கணித்து நேராக பவுல்டு ஆகி வெளியேறினார். ஆனால் முதல் ஓவரில் 4-வது பந்தில் கே.எல்.ராகுல் காலை நகர்த்தாமல் தஸ்கின் அகமதுவின் புல் லெந்த் ஆஃப் சைடு பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் உள்விளிம்பில் பட பவுல்டு ஆனார். ராகுல் 2 ரன்களில் அவுட்.
அதன் பிறகு புஜாரா, விஜய் ஆதிக்கம் செலுத்தினர் இருவரும் இணைந்து 178 ரன்களை 2-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.
தொடக்க திணறலுக்குப் பிறகு விஜய்-புஜாரா அபாரம்: வாய்ப்புகளை நழுவ விட்ட வங்கதேசம்!
இதில் புஜாராவுக்கு 11 ரன்களில் ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்ட வங்கதேசம், முரளி விஜய் 35 ரன்களில் இருந்த போது மிகவும் சுலபமான ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட்டனர். இந்த விக்கெட்டுகளை அப்போதே வீழ்த்தி கோலிக்கு ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே லைனில் தொடர்ந்து வீசி நெருக்கமான களவியூகம் அமைத்து சவால் அளித்து கோலியையும் வீழ்த்த முடிந்திருந்தால் உண்மையில் வங்கதேசம் இன்று டாசில் தோல்வியடைந்தாலும் சவால் அளித்திருக்கும், ஆனால் வங்கதேச பீல்டிங்கும் ஒத்துழைக்கவில்லை ஒரு நேரத்துக்குப் பிறகு ஸ்பின்னர்களும் ஷார்ட் பிட்ச்களை அதிகமாக வீச புஜாரா (83), விஜய், கோலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர். விஜய் புஜாரா 5-வது சதக்கூட்டணி அமைத்தனர், மொத்தமாக 8 சதக்கூட்டணிகளை இவர்கள் அமைத்துள்ளனர்.
தொடக்கத்தில் கார்ட்னி வால்ஷ் பயிற்சியாளர் என்பதை நிரூபிக்கும் விதமாக மெதுவான, சற்றே புல் உள்ள பிட்சில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மென்களின் உத்தியைச் சற்றே ஆட்டிப்பார்த்தனர். ராகுல் ஆட்டமிழந்த பிறகு பெற்ற உத்வேகத்தையடுத்து தஸ்கின் அகமது, கம்ருல் இஸ்லாம் ராபி ஆகியோர் காற்றிலும் பிட்சிலிருந்தும் ஸ்விங்கைப் பெற்றனர். நிறைய பந்துகள் எட்ஜைக் கடந்து சென்றன. ஓரிரு முறை கூர்மையான ஷார்ட் பிட்ச் பவுன்சர் பந்துகள் மூலம் விஜய் புஜாரா தங்களது மட்டைகளை முகத்திற்கு மேல் கொண்டுவரச் செய்தனர். புஜாராவின் பவுண்டரி ஒன்று கல்லிக்கு அருகில் கேட்ச் பிடிக்ககூடிய உயரத்தில் பவுண்டரி சென்றது. அதன் பிறகுதான் கம்ருல் புஜாராவின் எட்ஜைப் பிடிக்க பந்து ஸ்லிப்பில் ஷாகிப் அல் ஹசனுக்கு முன்னால் பிட்ச் ஆனது, ஆனால் இது விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமின் கேட்ச் ஆகும். புஜாரா தப்பினார். இடையே ஒருமுறை புஜாராவின் லீடிங் எட்ஜ் ஒன்று கவருக்கு முன்னால் தரையில் விழுந்தது.
பிறகு 15-வது ஓவரில், நம்பக ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசன் மிராஸ், புஜாரா, விஜய் இருவரையும் எட்ஜ் செய்ய வைத்தார், இரண்டும் கேட்ச் பிடிக்கக் கூடிய வகையில் சென்றது ஆனால் ஸ்லிப்புக்கு தள்ளி சென்றது.
இதன் பிறகுதான் விஜய்யை ரன் அவுட் செய்ய கிடைத்த மிகமிக எளிதான வாய்ப்பை கோட்டை விட்டனர். புஜாரா, விஜய் இருவரும் ஒரு முனையில் இருந்தனர். கம்ருல் ஸ்கொயர் லெக் திசையில் டைவ் அடித்து பீல்ட் செய்து த்ரோவை அடிக்க பவுலர் முனையில் மெஹதி பந்தைப் பிடிக்கத் தவறினார்.
இத்தகைய அருமையான தொடக்கத்துக்குப் பிறகே வங்கதேசம் நெருக்கடி கொடுக்க தவறிவிட்டது. புஜாரா முதல் தன்னம்பிக்கையான பவுண்டரியையும், விஜய் கம்ருலை இரண்டு புல்ஷாட் பவுண்டரிகளையும் அடித்து நிலைக்க தொடக்க பதற்றங்கள் நிதானமடைய இருவரும் அருமையாக ஆடத்தொடங்கினர்.
உணவு இடைவேளையின் போது 86/1 என்ற நிலையிலிருந்து விஜய் தனது ஆட்டத்தை தொடங்கினார். அருமையான கவர் டிரைவ், ஷாகிப் அல் ஹசனை அவர் தலைக்கு மேல் ஒரு ஷாட், லேட் கட் என்று விஜய் தனது ஷாட்களை ஆடினார். உணவு இடைவேளையிலிருந்து தேநீர் இடைவேளை வரை 31 ஓவர்களில் 120 ரன்களை இருவரும் சேர்த்தனர். மெஹதி ஹசன் பந்தை நேராக புஜாரா பவுண்டரி அடித்த போது முதல்தர கிரிக்கெட் ஒரே சீசனில் அதிக ரன்களை எடுத்த சந்து போர்டே (1604 ரன்கள் 1964-65) சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தினார்.
83 ரன்களில் சதம் நோக்கிய அவரது முயற்சி மெஹதி ஹசன் பந்தில் முடிவுக்கு வந்தது. முஷ்பிகுரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முரளி விஜய் தனது 9-வது டெஸ்ட் சதத்தை எடுத்து 108 ரன்களில் பவுல்டு ஆனார். கோலி, விஜய் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 13 ஒவர்களில் 54 ரன்களைச் சேர்த்தனர்.
கோலியின் தங்குதடையற்ற சதம்
விராட் கோலி தொடங்கிய போதே மெஹதி ஹசன் மிராஸ் ஷார்ட் பந்தை கட் செய்து பவுண்டரி அடித்தார். பிறகு டஸ்கின் அகமதுவின் நல்ல பந்தை நேராக பவுண்டரி அடித்தார், இதன் மூலம் தான் என்னமாதிரியான பார்மில் இருக்கிறார் என்பதை வங்கதேசத்துக்கு அறிவுறுத்தினார். பிறகு வேகப்பந்து வீச்சாளர் கம்ருலை ஆஃப் திசையில் இரண்டு பவுண்டரிகளை தூக்கி அடித்த போது பந்து வீச்சை ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். இடையில் கோலியின் மட்டையில் பட்ட பந்துக்கு எல்.பி. ரிவியூ செய்டு ஒரு ரிவியூவை விரயம் செய்தனர் வங்கதேச அணியினர்.
ஷாகிப் அல் ஹசனை அருமையான டைமிங்கில் லாங் ஆனில் ஒரு பவுண்டரி அடித்த பிறகு 70 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். அரைசதத்திற்கு பிறகு ஒருமுறை தைஜுலின் பந்தில் ஏறக்குறைய எட்ஜ் செய்திருப்பார், ஆனால் தப்பித்தார். மெஹதி ஹசன் மிராஸின் ஆஃப் ஸ்டம்ப் பந்தை அருமையாக மிட்விக்கெட் பவுண்டரிக்கு விரட்டி 130பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் சதம் கண்டார் கோலி, இது அவரது 16-வது சதம். இந்த சீசனில் 9 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார் கோலி.
ரஹானே களமிறங்கிய பிறகு ஒரு 120 பந்துகளில் கோலி 70 பந்துகளையாவது சந்தித்திருப்பார், இதனால் ரஹானே மீதான அழுத்தம் பெரும்பாலும் குறைந்தது, வங்கதேச பவுலர்கள் தேவையிலாமல் ரஹானேவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
ஆட்ட முடிவில் கோலி 111 ரன்களுடனும் ரஹானே 7 பவுண்டரிகளுடன் 45 ரன்களையும் எடுத்தனர். மொத்தத்தில் முதல் இரண்டு மணி நேர ஆட்டத்துக்குப் பிறகு குறிப்பாக முதல் ஒருமணி நேர ஆதிக்கத்துக்குப் பிறகு வங்கதேசத்திடமிருந்து விஜய், புஜாரா, கோலி ஆகியோர் பறித்துச் செல்ல இந்திய அணி தன் முதல் நாள் ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது.
நன்றி : தி இந்து தமிழ்