Breaking News
எம்.எல்.ஏ.க்கள் செய்ய வேண்டியவை: அரவிந்த்சாமி யோசனை

தங்களுடைய தொகுதி மக்களின் விருப்பத்தைக் கேட்டறிந்த பிறகு, யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு நடிகர் அரவிந்த்சாமி யோசனை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக அரசியல் சூழல் தொடர்பாக அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது நிலைப்பாட்டை வேதனையுடன் ட்வீட் செய்திருந்தார். அதை மேற்கோள்காட்டி, சட்டமன்ற தொகுதி மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் நடிகர் அரவிந்த்சாமி ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அது, சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவைத் தெரிவித்தார். தன் தொகுதி மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தாம் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருக்கிறார்.

இதன் தொடர்ச்சியாக, “நீங்கள் சொன்ன மக்கள் கருத்தை எங்க தொகுதி எம்.எல்.ஏ ஏற்றுக் கொண்டார்” என்று ரசிகர் ஒருவர் அரவிந்த்சாமிக்கு ட்வீட் செய்தார். அந்த ட்வீட்டை மேற்கோள்காட்டிய அரவிந்த்சாமி, “உங்கள் தேர்வு யாராக இருந்தாலும் அதை உங்கள் பிரதிநிதியிடம் தெரிவியுங்கள். தங்கள் தொகுதியில் இருக்கும் மக்களுக்கு யார் தேவை என்பதை அவர்கள் புரிந்துகொண்டு அதற்கேற்றார்போல நடந்து கொள்ளட்டும்” என்று பதிலளித்துள்ளார்.

கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பயணம் என்ற செய்தியை ரீ-ட்வீட் செய்தார் அரவிந்த்சாமி.

அதனைத் தொடர்ந்து, “கட்டாயப்படுத்தி தனிமைப்படுத்தல் என்ற குற்றச்சாட்டு இருக்கும்போது, ரிசார்ட்டில் இருக்கும் எம்.எல்.ஏக்களிடம், விருப்பமுடன் தான் தங்கியுள்ளீர்களா என கேட்பது அர்த்தமற்றது.

எம்.எல்.ஏக்கள் தங்கள் விருப்பத்தின்பேரில் தான் அங்கு 2 நாட்களாக தங்கியிருக்கிறார்கள் என்றால் அவர்கள் வேலை செய்யாமல் ஏன் அங்கு ஏன் இருக்கிறார்கள் என மக்கள் கேள்வி கேட்க வேண்டும்.

எம்.எல்.ஏக்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும். தங்கள் தொகுதி மக்களுடன் பேசி யாருக்கு வாக்களிப்பது (சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு) என முடிவெடுக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கவேண்டும் என நான் சொல்லவில்லை. அந்தந்த தொகுதி மக்கள் யார் வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்கள் நியாயமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த்சாமி கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.