Breaking News
‘எடப்பாடி’ கார் டிரைவரின் தந்தை தற்கொலை ஏன்?

அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் கார் டிரைவரின் தந்தை தற்கொலை வழக்கை வேறு திசையில் எடுத்துச் செல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தற்கொலை:

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, கோவில்பத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. இவரது மகன் மகாராஜன், 27. இவரை, சேலம், சூரமங்கலம் போலீசார், திருட்டு வழக்கில் தேடினர். இது தொடர்பாக, தனிப்படை போலீசார், சொக்கலிங்கத்திடம் விசாரித்தனர். இதனால், மனமுடைந்த சொக்கலிங்கம், விஷம் குடித்தார்; பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் இறந்தார்.

திசை திருப்ப முயற்சி:

மகாராஜன், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், கார் டிரைவராக பணியாற்றுபவர் என்பதால், போலீஸ் அதிகாரிகள் உத்தரவுப்படி, உண்மை சம்பவம் மறைக்கப்பட்டு, வழக்கை வேறு திசையில் எடுத்துச் செல்வதாக போலீசார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறியதாவது: ஈரோடு ரயில்வே கான்ட்ராக்டர் ராஜ்குமார், சென்னையில், 10 இடங்களில் பாலம் கட்டும் பணி மேற்கொள்கிறார். அவரிடம், கார் டிரைவராக, மகாராஜன் பணிபுரிந்தார். பிப்., 5ல், தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க, 94 லட்சம் ரூபாயுடன், காரில் ராஜ்குமார், சென்னை சென்றார். சேலம் வழியாக சென்றபோது, அவருக்கு, நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, ஐஸ்வர்யம் மருத்துவமனையில், ராஜ்குமாரை மகாராஜன் அனுமதித்தார். பின், மகாராஜன், காரில் இருந்த பணத்துடன் மாயமானார். இவ்வாறு அவர் கூறினார்.

நடந்தது என்ன?

எடப்பாடி பழனிச்சாமியிடம், கார் டிரைவராக பணியாற்றுபவர் தான் மகாராஜன். தற்போதைய அரசியல் சூழலில், இப்பிரச்னை வெளியே தெரிந்தால், சிக்கல் ஏற்படும் எனக் கருதி, வழக்கை மாற்ற, போலீஸ் அதிகாரிகளுக்கு, அமைச்சர் தரப்பில் உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அமைச்சருக்கு விசுவாசமான, ஈரோட்டை சேர்ந்த கான்ட்ராக்டர் ராஜ்குமாரை தொடர்புபடுத்தி, சம்பவத்தை வேறு திசையில் போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.