Breaking News
பிரபல தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்: நடிகை வரலட்சுமி

தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் நடிகை பாவனா தனது காரில் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடித்து கொச்சியிலிருந்து திருச்சூருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். இவரது கார் எர்ணாகுளத்தை அடுத்த அங்கமாலி அருகே வந்தபோது, மற்றொரு வேனில் வந்த மர்மக் கும்பல் பாவனா காரை வழிமறித்தது. வேனில் இருந்த மர்ம நபர்கள், கார் ஓட்டுநரைத் தாக்கி பாவனாவை காருடன் கடத்திச் சென்றனர். அப்போது பாவனாவை துன்புறுத்தி, அந்த காட்சியை புகைப்படமாகவும், விடியோவாகவும் அவர்கள் பதிவு செய்தனர். பிறகு, காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் ஏறி அந்தக் கும்பல் தப்பிச் சென்றது. இதையடுத்து, காக்கநாடு பகுதியில் உள்ள ஓர் இயக்குநரின் வீட்டுக்குத் தானே காரை ஓட்டிச் சென்று பாவனா உதவி கேட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. நடிகை பாவனாவை காருடன் கடத்திச் சென்று துன்புறுத்தியது தொடர்பாக கோவையில் 2 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து பாவனாவுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழ், மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த விவகாரத்தை முன்னிட்டு நடிகை வரலட்சுமி வெளியிட்டுள்ள பதிவு:

ஒரு பெரிய தொலைக்காட்சியின் தலைமை அதிகாரியுடனான கூட்டம் முடிந்தபிறகு அவர் என்னிடம் கேட்டார், நாம வெளியே சந்திக்கலாமா என்றார். ஏதாவது வேறு வேலைகள் தொடர்பாகவா என்று கேட்டேன். அவர் உடனே ஒரு அற்பத்தனமான சிரிப்புடன் (இப்படித்தான் அதற்குப் பொருத்தமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுபோல), இல்லை இல்லை. வேலை விஷயமாக இல்லை. மற்ற விஷயங்களுக்காக என்றார். எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி, கோபத்தை மறைத்துக்கொண்டு, மன்னிக்கவும். இங்கிருந்து கிளம்புங்கள் என்றேன். அப்போது அவர் கடைசியாக சொன்னது – அவ்வளவுதானா? சிரித்தபடி வெளியேறினார்.

இதைப் பற்றி கேள்விப்படுபவர்கள் வழக்கமாக சொல்வது – திரையுலகம் இப்படித்தான். இங்குச் சேரும்போதே தெரியும்தானே. இப்போது ஏன் புகார் செய்கிறாய் அல்லது இதைக் கண்டு ஆச்சர்யப்படுகிறாய்? என்பார்கள். என் பதில் – ஏற்கெனவே பெண்களுக்கு நேரும் அநியாயங்களின் தொடர்ச்சியாகவோ மாமிசத்தின் துண்டாகவோ இங்கு என்னை நடத்தப்பட விரும்பவில்லை. எனக்கு நடிப்பு பிடிக்கும். அதையே தொழிலாகக் கொண்டுள்ளேன்.

ஒரு பெண்ணாக என்னிடம் ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது. மறுப்பது இதைப் பற்றி வெளியே பேசுவது. ஆண்களுக்குச் சொல்ல விரும்புவது – பெண்களை அவமதிப்பதை நிறுத்தவேண்டும், இல்லாவிட்டால் வெளியேறவும்.

நான் ஒரு நடிகை. திரையில் கவர்ச்சியாக நடிப்பதால் என்னை மோசமாக நடத்தவேண்டும் என்பதல்ல. இது என் வாழ்க்கை, என் உடல், என் விருப்பம். என்னை அவமானப்படுத்துவதன் மூலம் தப்பித்துவிடமுடியும் என எந்த ஓர் ஆணும் எண்ணிவிடக்கூடாது.

என்னை மோசமாக நடத்தியவர் யார் என்கிற விவரம் தேவையில்லை. அது பிரச்னையை வேறு பக்கம் திருப்பிவிடும். அது ஒரு சின்ன விஷயமாக இருக்கலாம். பெரிய பாதிப்பில் இருந்து நான் தப்பித்திருக்கலாம். ஆனால் முக்கிய விவகாரம் குறித்து பேச அது இங்கு உதவுகிறது.

பெண்கள் என்ன அணியவேண்டும், எப்படிப் பேசவேண்டும் என்று பெண்களுக்குப் போதிப்பதைவிடவும் ஒரு பெண்ணை எப்படி நடத்தவேண்டும் என்று ஆண்களுக்குப் போதிக்கப்படவேண்டும். பெண் சக மனுஷியாக, பலம் வாய்ந்தவளாக, சுதந்தரமானவளாகக் கருதவேண்டும். ஓர் ஆண் நல்ல மனிதனாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் பெற்றோரால் இது கற்றுத்தரப்படவேண்டும்.

திரையுலகில் மட்டுமல்ல எல்லா மட்டத்திலும் பெண்களை அவமானப்படுத்துவது நிகழ்ந்துவருகிறது. பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பல குற்றங்கள் அதிகரித்துவருகின்றன. நம் கல்வி தகுந்த பாடங்களைக் கற்றுத்தரவில்லை. இதைப் பற்றிப் பேசப் பயப்படும் எல்லாப் பெண்களுக்குமாக நான் இங்கு இதைப் பற்றிப் பேசுகிறேன்.

இப்போது இதைப் பற்றிப் பேசாவிட்டால் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கனவாகவே இருக்கும். சமூகத்தில் இருந்து பாலியல் வன்முறை என்கிற வார்த்தையை நீக்கமுடியாமல் போய்விடும்.

நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. என் எல்லா சகோதரிகள், நண்பர்களும் இதுபற்றி பேசவேண்டும் என்று விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார். நன்றி :தினமணி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.