Breaking News
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றார் ஜிது ராய்

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ஜிது ராய், 10மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம், தில்லியில் நடைபெற்று வரும் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஆடவருக்கான 10மீ ஏர் பிஸ்டல் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் 8 பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் டோமோயுகி மட்சுடா மொத்தம் 240.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும், அவரை அடுத்து வியத்நாமின் ஜுவான் வின் ஹோவாங் 236.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
இந்திய வீரர் ஜிது ராய் மொத்தம் 216.7 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றார். முதல் சுற்றில் 7-ஆவது இடத்தில் இருந்த ஜிது ராய், 2-ஆவது சுற்றில் 98.7 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
இதையடுத்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், வெள்ளிப் பதக்க வாய்ப்பை சற்றே நெருங்கினாலும், பின்னர் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஜிது ராய் கூறியதாவது:
போட்டியின் தொடக்கத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன். வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகம் எனக்குள் எழுந்தது. எனினும், என்னால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்பட முடிவு செய்து, இறுதி வரை அவ்வாறே செயல்பட்டேன். பின்னர் படிப்படியாக முன்னேறினேன்.
ஸ்கோர் போர்டுகள் மனதை பாதிக்கக் கூடியவை என்பதால், அதைப் பற்றி யோசிப்பதில்லை. அந்த நிமிடத்தில் எனது கையில் இருக்கும் பணியை சிறப்பாகச் செய்து முடிப்பதிலேயே எனது முழு கவனத்தையும் செலுத்தினேன்.
இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது குறித்து எதையும் யோசிக்கவில்லை. தொடக்கத்தில் நான் சுட்ட சில மோசமான ஷாட்கள், எனக்குள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, எனக்கிருந்த நெருக்கடியை சற்று குறைத்தன. எனது தவறில் இருந்தே நான் கற்றுக் கொண்டேன்.
ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இது எனது மூன்றாவது சர்வதேச பதக்கம் ஆகும். முதல் இரு உலகக் கோப்பைகளில் ஒன்றில் தங்கமும், மற்றொன்றில் வெள்ளியும் பெற்றுள்ளேன் என்று ஜிது ராய் கூறினார்.
இந்நிலையில், இதே போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான ஓம்கார் சிங் மற்றும் அமன்பிரீத் சிங் தகுதிச் சுற்றிலேயே தோல்வியடைந்தனர். அவர்கள் முறையே 14 மற்றும் 19-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
இதனிடையே, ஆடவர் 50மீ ரைபிள் பிரிவில் பங்கேற்ற இந்திய வீரர் செயின் சிங் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். எனினும், அதில் மொத்தம் 141.9 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தையே பிடித்தார். அதேபோல், மற்றொரு பிரிவில் ககன் நரங் தகுதிச் சுற்றில் 15-ஆவது இடம் பிடித்து வெளியேறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.