Breaking News
சென்னை லீக் கால்பந்து: ஐசிஎஃப், சென்னை அணிகள் வெற்றி

சென்னை லீக் சீனியர் டிவிஷன் கால்பந்துப் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டத்தில் ஐசிஎஃப், சென்னை சிட்டி அணிகள் வெற்றி பெற்றன.
செயிண்ட் ஜோசப் – சென்னை கால்பந்து சங்கம் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி திங்கள்கிழமை தொடங்கி, சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை சீனியர் டிவிஷன் பிரிவின் முதல் ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி- கணக்கு தணிக்கை அலுவலக மனமகிழ் மன்ற கிளப் (ஏஜி) அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர் மாய்ஸாஃபெலா 22-ஆவது நிமிடத்தில் கோல் அடித்து கணக்கை தொடங்கினார். அடுத்ததாக, அந்த அணியின் சூசை 36-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, கோல் வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வந்தது ஏஜி அணி. இதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2-0 என முன்னிலை பெற்றது. பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை வீரர் பியுட்டின் ஒரு கோல் அடிக்க, அந்த அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஐசிஎஃப் வெற்றி: இதனிடையே, 2-ஆவதாக நடைபெற்ற ஐசிஎஃப் – சென்னை எஃப்சி அணிகள் இடையேயான ஆட்டத்தில் ஐசிஎஃப் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் இன்றி சம நிலையில் இருந்தன.
2-ஆவது பாதி ஆட்டம் நிறைவடைய இருந்த நிலையில், ஐசிஎஃப் அணியின் ஃப்ரெட்டி 93-ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். எஞ்சிய நேரத்தில் சென்னை எஃப்சி அணிக்கு கோல் வாய்ப்பு கிடைக்காததால், ஐசிஎஃப் அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டம்
இந்தியன் வங்கி – சென்னை யுனைடெட்
நேரம்: பிற்பகல் 3 மணி
தெற்கு ரயில்வே – சென்னை சுங்கத் துறை
நேரம்: மாலை 5 மணி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.