Breaking News
வரும் கோடை வெயில் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் கூறும் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் இன்று தொடங்கிய கோடை வெயில் காலம், வழக்கமான வெப்ப அளவை விட சற்று அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு ஜனவரி மாதம், 116 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக வெப்பம் நிறைந்த ஜனவரி மாதமாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியும் வெளியாகியுள்ளது.

மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைக்காலம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவின் வடக்குப் பகுதி மாநிலங்களில் வழக்கமான அளவை விட ஒரு டிகிரி செல்சியஸுக்கும் மேல் அதிகமான வெப்பம் பதிவாகும். பஞ்சாப், இமாச்சல், உத்தரகாண்ட், தில்லி, அரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, தெலங்கானா ஆகிய பகுதிகளில் அனல் காற்றும் வீசும்.

மற்ற பகுதி மாநிலங்கள், குறைந்தது 0.5 டிகிரி செல்சியஸ் முதல் ஒரு டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிக வெப்பம் பதிவாகும்.

1901ம் ஆண்டில் இருந்து எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2016ம் ஆண்டு தான் மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டாக இருக்கிறது. கடந்த அண்டில், ராஜஸ்தான் மாநிலம் பலோடியில் 51 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவானது. இதுதான் இந்திய வரலாற்றில் அதிக வெப்பம் பதிவான பகுதி.

கடந்த ஆண்டு கோடை வெப்பத்தின் உக்கிரத்தை தாங்க முடியாமல் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மட்டும் 400 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், 1901ம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு அல்ல கடந்த ஜனவரி மாதம் அதாவது 2017ம் ஆண்டில் நாம் சமீபத்தில் கடந்து வந்த ஜனவரி மாதம் தான் அதிக வெப்பம் நிறைந்த மாதமாகப் பதிவாகியிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் கோடை வெயிலின் உக்கிரத்துக்கு இந்த ஜனவரி மாத வெயிலே உதாரணம் என்று கருதப்படுகிறது. ஆனாலும், எல் நினோ உச்சத்தில் இருந்ததால், கடந்த 2016ம் ஆண்டு கோடை வெயில் உக்கிரமாக இருந்ததாகவும், அந்த அளவுக்கு இந்த ஆண்டு உக்கிரம் இருக்காது என்ற ஆறுதல் தகவலும் கிடைத்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.