Breaking News
வயது முதிர்வை தவிர்க்கும் காளான்

நமக்கு எளிதிலே, மிக அருகிலே கிடைக்கின்ற மூலிகைகள் மற்றும் அவற்றிலிருக்கும் சிறந்த மருத்துவ குணங்கள்பற்றி அறிந்து வருகிறோம். அந்த வகையில் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் இஞ்சி, பச்சைப்பட்டாணி மற்றும் காளான் ஆகியவற்றை பயன்படுத்தி சத்து நிறைந்த உணவு பதார்த்தங்களை தயாரிப்பது மற்றும் அதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம். மருந்து மாத்திரைகளுக்கு அடிமையாவதை தவிர்த்து, உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கை மருந்துகளை எடுத்துக்கொள்வதால் நமக்கு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. மேலும் நோய் வந்ததும், இயன்ற வரையில் மூலிகைகள் மற்றும் சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடலாம். அத்தகைய உணவுகளில் ஒன்றான காளானில் பூஞ்சையை வேரோடு அழிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், புற்று நோயை குணப்படுத்தும் தன்மையும் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின் பி, ரிபோஃபிளேவின், நியாசின் உள்ளிட்ட மருத்துவ குணங்களும், நுண்கிருமிகளை அழிக்கும் வல்லமையும், வலி, வீக்கத்தை கரைக்கும் தன்மையும் உள்ளது.

நரம்புகளுக்கு பலன் தருவதுடன், தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது. இதனுடன் தோலுடன் உள்ள பச்சைப்பட்டாணியை சமைத்து உண்பதால் உடலுக்கு சிறந்த புரதசத்தினை தருகிறது. பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, சி, இ சத்துகள் உள்ளன. மேலும் ரத்த சோகையினை நீக்குவதால், கர்ப்பிணிகளுக்கு சிறந்த உணவாகிறது.
புரதசத்து நிறைந்த காளான்- பச்சைபட்டாணி சுண்டல் செய்முறை: தேவையான பொருட்கள்: பச்சைப்பட்டாணி- வேகவைத்தது, காளான்- சிறிதாக நறுக்கியது, வெங்காயம் பொடியாக நறுக்கியது, நெய்/ வெண்ணெய்/நல்லெண்ணெய், மிளகுப்பொடி, உப்பு. வானலியில் நெய் விட்டு, உருகியதும், வெங்காயம், காளான் துண்டுகளை சேர்த்து வதக்கவும், அதனுடன் வேகவைத்த பச்சைப்பட்டாணி, மிளகு சேர்த்து கிளறவும். குழந்தைகளுக்கு சிறந்த உணவான இந்த சுண்டலில், புரதசத்து அதிகம் உள்ளது.

இது ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்த கொதிப்பு வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் மருந்தாக உள்ளது. இதில் வயது முதிர்வை தவிர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதோடு, சுவை மிகுந்ததாகவும் காணப்படுகிறது. இரண்டாவதாக நாம் அனைத்து உணவுகளிலும் அடிப்படையாக பயன்படுத்தும் இஞ்சியை பற்றி பார்ப்போம். செரிமானத்தை சரிசெய்யும் பசியை தூண்டும் இஞ்சி தேன் ஊறல் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: இஞ்சி-சிறிதாக நறுக்கியது, ஜாதிக்காய், ஜாதிபத்திரி பொடி(நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்), தேன், ஏலக்காய் பொடி.
சிறிதாக நறுக்கிய இஞ்சியுடன் ஜாதி பத்திரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவை நிறைந்த பாத்திரத்தின் மேல் மெல்லிய துணி கொண்டு மூடவும். மூன்று நாட்கள் இதனை வெயிலில் வைத்து எடுக்கவும்.

இஞ்சியானது தேனில் நன்கு ஊறியிருக்கும். இந்த மருந்தினை, தினமும் உணவுக்கு பின் நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறு முற்றிலும் தடுக்கப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் சளி, இருமல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். தோல் நீக்கி, காய்ந்து சுக்காகும் இஞ்சி எப்படி மருந்துகள் தயாரிக்க பயன்படுகிறதோ, அதேபோல், இஞ்சியை உணவுகளில் சேர்க்கும்போது, பல்வேறு உடல் உபாதைகளை தவிர்க்க முடியும். குறிப்பாக வயிற்று வலி, புளியேப்பம், பசியின்மை, வயிற்று நிறைவு, உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்த கொழுப்பு படிவது போன்றவற்றுக்கு சிறந்த பலன் தருகிறது. உள்ளுறுப்புகளையும் தூண்டி ஆரோக்கியமாக வைக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.