Breaking News
நீட் தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ல் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

நீட் நுழைவுத்தேர்வு திணிப்பை எதிர்த்து மார்ச் 10-ம் தேதி காலை 10 மணியளவில் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”நாடு முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவு (நீட்) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் (வியாழக்கிழமை) முடிவடைந்தது. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வருகிற மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிந்துரையோடு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு ஜனவரி 31-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு எடுத்துக்கொண்ட சரியான முயற்சிகளைப்போல் தமிழக அரசு இதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும் மற்றும் 50 விழுக்காடு முதுநிலை மருத்துவ இடங்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு வழங்கக்கூடிய 65 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும், சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கக்கூடிய 50 விழுக்காடு இடங்களுக்கும் நீட் நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட முடியும்.

ஆனால், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றிற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு வழங்கியிருப்பது அப்பட்டமான பாரபட்ச நடவடிக்கையாகும். தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தரமும், தகுதியும் உயர்த்துவதற்காக நுழைவுத் தேர்வை திணிக்கும் மத்திய அரசு, தனது நிறுவனங்களான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றிற்கு விலக்களிப்பது நியாயமா? மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசின் நீட் தேர்வை திணிப்பது கூட்டாட்சி தத்துவத்தை குழி தோண்டி புதைக்கிற செயலாகாதா?

தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 6,510 இடங்கள் உள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வு மத்திய பாடத்திட்டத்தின்படி நடத்தப்படுவதால், மாநில பாடத்திட்டத்தின்படி படித்து வருகிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலமே இருண்டு போய்விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டால் வெளி மாநில மாணவர்களே பெருமளவில் சேருகிற ஆபத்தான நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுமா? அல்லது 12ஆம் வகுப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்குமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (வியாழக்கிழமை) வரை நுழைவுத் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பது குறித்து எந்த விளக்கத்தையும் தமிழக முதலமைச்சரோ, கல்வி அமைச்சரோ தெரிவிக்காதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. தமிழக மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிமுக அரசு ஏனோதானோ என்று அலட்சிய மனப்பான்மையோடு செயல்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

அதே நேரத்தில் இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு கண்டும் காணாமல் இருப்பதும், தமிழக பா.ஜ.க.வினர் நுழைவுத் தேர்வை திணிக்கிற முயற்சியில் தீவிரமாகத் துணை போவதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

நடப்பு ஆண்டில் நீட் தேர்வு குறித்து கருத்து கூறிய தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மாணவர்கள் எல்லோரும் தேர்வு எழுதத் தயார் நிலையில்தான் இருக்கிறார்கள் என்று கூறியிருப்பது அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சமீபத்தில் பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் கூறியபடி 2009 முதல் 2016 வரை தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தமுள்ள 29,225 இடங்களில் அரசு பள்ளிகளில் படித்த 278 மாணவர்கள் மட்டுமே தகுதியின் அடிப்படையில் சேர முடிந்தது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மொத்தத்தில் அரசு பள்ளிகளில் படித்தவர்களில் ஒரு சதவீதத்தினர் தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிந்தது என்ற நிலை தமிழக மாணவர்களின் கல்வியின் தரத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலை குறித்து கொஞ்சம் கூட கவலையோ, வருத்தமும் இல்லாமல் கல்வியமைச்சர் கருத்து கூறியிருப்பதைவிட பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக மக்கள் மீது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை திணித்து மக்களின் கடும் சினத்திற்கு ஆளாகியுள்ள மத்திய பாஜக அரசு, 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும் வகையில் நுழைவுத் தேர்வை திணிப்பதை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வருகிற மார்ச் 10 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து முன்னின்று நடத்தும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

தமிழக மக்களின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில் நுழைவுத் தேர்வை தடுத்து நிறுத்தாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நடைபெறும் ஆர்பாட்டத்தில் முன்னணி காங்கிரஸ் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மற்றும் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும், மாணவர்களும், இளைஞர்களும் பங்கேற்று நீட் தேர்வுக்கு எதிராகக் கண்டன குரல் எழுப்ப அனைவரும் அணி திரண்டு வருக என அன்போடு அழைக்கிறேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.