Breaking News
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதல்முறையாக தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது

பட்ஜெட் அறிவிப்புகள் குறித்து முக்கிய ஆலோசனை

முதல்வராக எடப்பாடி பழனி சாமி பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில், பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய துறை வாரியான அறிவிப்புகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து அதிமுகவில் எழுந்த பிரச்சினைகளால் தமிழக அரசியலில் பரபரப்பும் குழப்பமும் நிலவியது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்காக தனது பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், பிறகு சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், அவரது முதல்வர் கனவு சிதைந்தது. இதையடுத்து, முதல்வராக எடப்பாடி பழனிசாமி கடந்த 16-ம் தேதி பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். 18-ம் தேதி நடந்த சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில், பழனிசாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. கடந்த 23-ம் தேதி அமைச்சரவையில் முதல்முறையாக மாற்றம் செய்யப்பட்டது. முதல்வரிடம் இருந்த நிதித்துறை, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தீவிர மடைந்தன. முதலில், துறைகள் வாரியாக முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு தொடர்பான ‘புல்லட் பாயின்ட்’கள் பெறப்பட்டு, அவை தொகுக்கப்பட்டன. அவற்றுக்கான நிதி ஆதாரம் போன்றவை ஆய்வு செய்யப்பட்டு, முழுமையான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. தமிழக அரசின் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட், இந்த மாதம் 3-வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள், துறை வாரியான அறிவிப்புகளை இறுதி செய்வதற் காக தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுதான்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தேதி, மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தும் நாட்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத் தில் முடிவெடுக்கப்படும். இதுதவிர, அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங் களுக்கான நிதி ஒதுக்குதல், துறைகள்தோறும் புதிய அறிவிப்பு களுக்கான நிதி தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் ஆகியவையே தற்போது முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக்கு அளிப்பதற்கான சட்டத் திருத்தம், பேரவையில் நிறை வேற்றப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வில்லை. மே 7-ம் தேதி ‘நீட்’ தேர்வு நடக்கவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப் படாவிட்டால், தமிழக மாணவர்கள் நிலை கேள்விக்குறியாகிவிடும்.

அதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என போராட்டக் குழுவினரிடம் முதல்வர் பழனிசாமி உறுதியளித்துள்ள போதிலும் போராட்டம் தொடர்கிறது.

விளைநிலங்களை மனைப் பகுதிகளாக பதிவு செய்வதற்கும், அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் பதிவுக்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் பண மதிப்பு நீக்கம் போன்ற காரணங்களால் பதிவுத்துறை வருவாய் குறைந்துள்ளது. சிறப்பு பொது விநியோகத் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்துவதால் ஏற்படும் செலவினங்களை தமிழக அரசு ஏற்க வேண்டிய நிலை உள்ளது. இவைதவிர இலவச, மானிய திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியுள்ளதால், வருவாயை பெருக்க மேலும் சில திட்டங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான திட்டங்களும் பட்ஜெட்டில் இடம் பெறக்கூடும்.

மேலும், இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. கோடை தொடங்கும் முன்பே பல மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மே 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினையை சமாளிப்பது, உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் ஆதரவை பெறுவது போன்ற வற்றை கருத்தில் கொண்டே பட்ஜெட் தயாரிப்பு இருக்கும் என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.